உலகக் கோப்பை 2023ல் 35வது போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது காலை 10.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த  போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 


நியூசிலாந்து இந்த போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் இருக்க விரும்பும். அதேநேரத்தில், இன்றைய போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள பாகிஸ்தான் அணி விரும்பும். ஏனெனில் இந்த போட்டியில் எந்த அணி தோற்றாலும் அரையிறுதிக்கு செல்லும் பாதை அவர்களுக்கு மிகவும் கடினமாகிவிடும். 


காயத்தால் திணறும் நியூசிலாந்து.. 


நியூசிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்து உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து, ஜிம்மி நீஷம் தனது வலது கை முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். மேலும், மார்க் சாம்ப்மேன் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் கட்டைவிரல் காயம் காரணமாக விளையாடுவதில்லை. 


நியூசிலாந்து vs பாகிஸ்தான்: நேருக்கு நேர்


பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மொத்தம் இதுவரை 115 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், நியூசிலாந்து 51 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 60 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சொந்த மண்ணில் நியூசிலாந்து 31 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 22 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரத்தில், வெளிநாட்டு மண்ணில் நியூசிலாந்து 6 வெற்றிகளையும், பாகிஸ்தான் 15 வெற்றிகளையும் பெற்றுள்ளது. 


இதுதவிர இவ்விரு அணிகளுக்கிடையிலான கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளின் முடிவை பார்த்தால் நியூசிலாந்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தான் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.


பிட்ச் எப்படி..? 


பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் ஆடுகளம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. கடந்த 10 ஒருநாள் போட்டிகளில், இங்கு முதலில் பேட்டிங் செய்த அணிகளின் சராசரி ஸ்கோர் 304. இருப்பினும் டாஸ் வென்ற அணி ரன் துரத்தி வெற்றியை பெறவே விரும்புகின்றன. ஏனெனில், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 60 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதே நன்று. 


யாருக்கு வெற்றி..? 


இந்த போட்டியில் பாகிஸ்தான் நல்ல ஃபார்மில் இல்லாவிட்டாலும், அந்த அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்தாலும், நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் சாதனை மிகவும் சிறப்பாக இருந்தது. கடந்த ஐந்து உலகக் கோப்பைத் தொடரில், 2011-ல் நியூசிலாந்துக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு அதிகம் என தெரிகிறது.


கணிக்கப்பட்ட இரு அணி விவரங்கள்: 


பாகிஸ்தான் அணி: 


பாபர் அசாம் (கேப்டன்), ஃபகார் ஜமான், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது ஷகீல், இப்திகார் அகமது, ஆகா சல்மான், ஷாஹீன் அப்ரிடி, உசாமா மிர், முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப்.


நியூசிலாந்து அணி:


டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன்/கைல் ஜேமிசன், டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட்.