ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை  கடந்த 2011ம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இதில் 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதிப் போட்டிகள் அதைதொடர்ந்து இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. 


பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் 2023:


அகமதாபாத்தில் தொடங்கி சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, தர்மசாலா, லக்னோ உள்ளிட்ட 10 நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படும் உலக கோப்பையை காண உலகம் முழுவதுமிருந்து இந்தியாவுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர் ரசிகர்கள்.


இந்த நிலையில், மைதானம் வந்து பார்க்க உள்ள ரசிகர்களுக்கு பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு தந்துள்ளது. மைதானம் வரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் விலையில்லா மினரல் வாட்டர் வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.


இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் ஜெய் ஷா வெளியிட்ட பதிவில், "ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2023இன் முதல் பந்துக்காக அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம். உற்சாகமான சூழல் நிலவி வருகிறது.


ரசிகர்களுக்கு பிசிசிஐ தந்த சர்ப்ரைஸ்:


இச்சூழலில், இந்தியா முழுவதும் உள்ள மைதானங்களில் பார்வையாளர்களுக்கு பேக்கேஜ் செய்யப்பட்ட இலவச மினரல் வாட்டர் வழங்குகிறோம் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அதிகமாக தண்ணீர் குடியுங்கள். போட்டிகளை ரசியுங்கள். ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குவோம்" என பதிவிட்டுள்ளார்.


நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் போட்டியை நடத்தும் இந்தியா உடன், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து மற்றும் தென்னாப்ரிக்கா என மொத்தம் 10 அணிகள் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும்.


தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன், கடந்த தொடரில் இரண்டாவது இடம்பிடித்த நியூசிலாந்து மோதி வருகிறது. தொடரை வெற்றிகரமாக தொடங்க இங்கிலாந்து அணியும், 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பெற்ற தோல்விக்கு பழிவாங்கும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டி வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது.


போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட்-ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.