ODI WC 2023 Australia Team: ஐசிசி உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் போட்டிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் விவரங்கள் ஆகியவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

உலகக்கோப்பை தொடர்:

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள, ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் 5ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் மோதும் இந்த கிரிக்கெட் திருவிழாவை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்தியாவிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, பாட் கம்மின்ஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த அணியின் பலம், பலவீனம், எதிர்த்து விளையாட உள்ள அணிகளின் விவரங்கள், விளையாட உள்ள மைதானங்கள் உள்ளிட்ட மொத்த விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய அணி விவரம்:

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுசானே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் பலம்:

ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பலமாக கருதப்படுவது அவர்கள் கொண்டுள்ள மிக நீளமான பேட்டிங் லைன் - அப் தான். 9வது விக்கெட்டிற்கு களமிறங்கும் வீரர் கூட மிகப்பெரிய ஷார்ட்களை அடிக்கும் திறமை பெற்றுள்ளனர். இந்தியாவில் விளையாடி அதிக அனுபவம் கொண்டுள்ள டேவிட் வார்னர் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழக்கூடும்.

டிராவிஸ் ஹெட் காயம் காரணமாக, ஆல்-ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க உள்ளார். ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் ஹிட்டர்களாக இருப்பதோடு, சுழற்பந்துவீச்சையும் நேர்த்திய விளையாடும் திறன் கொண்டவர்களாக உள்ளனர்.

ஆல் ரவுண்டர்:

மிட்செல் ஸ்டார்க் தலைமையிலான ஆஸ்திரேலியாவின் பவுலிங் யூனிட், எதிரணியை மிரட்டும் வகையில் அமைந்துள்ளது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க் உலகக்கோப்பையில் வெறும் 18 போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளை குவித்துள்ளார். அவருக்கு உறுதுணையாக பாட் கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோர் வேகத்தில் மிரட்டுகின்றனர். கிரீன் மற்றும் ஸ்டோய்னிஸ் ஆகியோரும் விக்கெட் வீழ்த்துவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோர் சுழற்பந்து வீச்சில் வலுசேர்க்கின்றனர்.

ஆஸ்திரேலிய அணியின் பலவீனம்:

ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பலவீனமாக இருப்பது ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி மற்றும் கேமரூன் கிரீன் போன்ற நட்சத்திர வீரர்கள், அண்மைக்காலமாக பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காதது தான்.

இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும் நிலையில், ஆடம் ஜம்பா மட்டுமே முழு நேர சுழற்பந்து வீச்சாளராக இடம்பெற்றுள்ளார். ஒருவேளை அவரது பந்துவீச்சு தோல்வியடந்தைததால், அது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடவாக அமையும். பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் காயங்களில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளனர். இதனால், வீரர்களின் காயமும் அந்த அணிக்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது.

ஆஸ்திரேலியா அணியின் போட்டி விவரங்கள்: 

தேதி  போட்டி விவரங்கள் மைதானம்
அக்டோபர் 8  ஆஸ்திரேலியா - இந்தியா எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை
அக்டோபர் 12  ஆஸ்திரேலியா - தென்னாப்ரிக்கா லக்னோ மைதானம் 
அக்டோபர் 16  ஆஸ்திரேலியா - இலங்கை லக்னோ மைதானம்
அக்டோபர் 20  ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் சின்னசாமி மைதானம், பெங்களூரு
அக்டோபர் 25  ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அருண் ஜெட்லி மைதானம், டெலி
அக்டோபர் 28  ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தர்மசாலா மைதானம்
நவம்பர் 4  ஆஸ்திரேலியா - இங்கிலாந்து நரேந்திர மோடி மைதனம், அகமதாபாத்
நவம்பர் 7  ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் வான்கடே மைதானம், மும்பை
நவம்பர் 12  ஆஸ்திரேலியா - வங்கதேசம்  புனே மைதானம்

உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணி:

உலகக்கோப்பை தொடரை அதிகமுறை வென்ற அணி என்ற பெருமை ஆஸ்திரேலிய அணி தன்னகத்தே கொண்டுள்ளது. 1987ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்றது. அதைதொடர்ந்து, 1999, 2003, 2007 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளிலும் அந்த அணி ஒருநாள் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியுள்ளது. ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களையும் கைப்பற்றிய ஒரே நாடு என்ற பெருமையையும் ஆஸ்திரேலியா மட்டுமே பெற்றுள்ளது.