கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் உலகில் இவர் படைத்த சாதனைகள் பலவும் இன்று முறியடிக்கப்படாமல் உள்ளது. இருந்தபோதிலும் அவரது சில சாதனைகளை ஜாம்பவான்களாக உருவெடுத்துள்ள விராட் கோலி, ஜோ ரூட் போன்ற வீரர்கள் முறியடித்துள்ளனர். இந்த சூழலில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் என்ற சச்சின் சாதனையை வித்தியாசமான முறையில் ஜோ ரூட் முறியடித்துள்ளார்.
சச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்:
இங்கிலாந்து அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஓவலில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் டக் அவுட்டானார். இரண்டாவது இன்னிங்சில் ரூட் 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.
இரண்டாவது இன்னிங்சில் ஜோ ரூட் 18 ரன்கள் எடுத்திருந்தபோது சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை இதுவரை சச்சின் டெண்டுல்கர் தன் வசம் வைத்திருந்தார். அந்த சாதனையை ஜோ ரூட் தற்போது தன்வசமாக்கியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்சில் ஆடி 1625 ரன்கள் எடுத்துள்ளார். ஜோ ரூட் தற்போது 1630 ரன்கள் எடுத்து தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் 4வது இன்னிங்சில் அதிக ரன்கள்:
- ஜோ ரூட் – 1630 ரன்கள் – 49 இன்னிங்ஸ்
- சச்சின் டெண்டுல்கர் – 1625 ரன்கள் – 60 இன்னிங்ஸ்
- அலஸ்டயர் குக் – 1611 ரன்கள் -53 இன்னிங்ஸ்
- கிரீம் ஸ்மித் – 1611 ரன்கள் – 41 இன்னிங்ஸ்
- சந்தர்பால் – 1580 ரன்கள்- 49 இன்னிங்ஸ்
- டிராவிட் – 1552 ரன்கள் – 56 இன்னிங்ஸ்
விராட் கோலி இந்த பட்டியலில் 31 இன்னிங்சில் ஆடி 1097 ரன்களுடன் 26வது இடத்தில் உள்ளார். ஜோ ரூட் இதுவரை 150 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 274 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ளார். அதில் மொத்தம் 35 சதங்கள், 6 இரட்டை சதங்கள், 64 அரைசதங்களுடன் 12 ஆயிரத்து 777 ரன்கள் எடுத்துள்ளார். இதுதவிர 171 ஒருநாள் போட்டிகளில் ஆடி 16 சதங்கள், 39 அரைசதங்களுடன் 6 ஆயிரத்த 522 ரன்கள் எடுத்துள்ளார். 32 டி20 போட்டிகளில் ஆடி 893 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51 சதங்கள், 6 இரட்டை சதங்கள் மற்றும் 68 அரைசதங்களுடன் 15 ஆயிரத்து 921 ரன்கள் எடுத்துள்ளார். 463 ஒருநாள் போட்டிகளில் ஆடி 49 சதங்கள், 1 இரட்டை சதம், 96 அரைசதத்துடன் 18 ஆயிரத்து 426 ரன்கள் எடுத்துள்ளார். 78 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1 சதத்துடன் 2 ஆயிரத்து 334 ரன்கள் எடுத்துள்ளார்.