பாகிஸ்தானுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு கேப்டனாக கேன் வில்லியம்சன் நியூசிலாந்து டி20 அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். கடைசியாக இவர் 2022 நவம்பர் 20 அன்று டி20ஐ விளையாடினார்.


வருகின்ற ஜனவரி 12ம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கு நியூசிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த ஐபிஎல் 2023 சீசனில் அதாவது சரியான 9 மாதங்களுக்கு முன்பு கேன் வில்லியம்சனுக்கு முழங்காளில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு நீண்ட காலம் அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியில் உள்ளேயும் வெளியேயும் விளையாடி கொண்டு இருந்தார். இதற்கு பிறகு, வங்கதேச சுற்றுப்பயணத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்தார். இருப்பினும், வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இப்போது மீண்டும் அவர் நியூசிலாந்து அணிக்கு திரும்பியதன் மூலம் வலுவாக பார்க்கப்படுகிறது. 






காயத்தில் இருந்து மீண்ட வீரர்கள்: 


மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டெவோன் கான்வே ஆகியோரும் திரும்பினர். ஹென்றி மற்றும் பெர்குசன் ஆகியோர் தங்கள் காயங்களிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். அவரது பெரிய வீரர்கள் திரும்பியதும், நியூசிலாந்தின் பயிற்சியாளர் மாட், டேவி, லாக்கி மற்றும் கேன் ஆகியோரை மீண்டும் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார். இந்த நான்கு திறமையான வீரர்களின் திறமையும் அனுபவமும் எங்கள் அணியின் பலத்தை அதிகரிக்கும்.


மாட் ஹென்றி, தொடை காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பையில் சில போட்டிகளைத் தவறவிட்ட பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்புவது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான பணி சுமை காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் இருந்து ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லாக்கி பெர்குசன் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்காத நிலையில், 3வது போட்டியில் இருந்து அணியில் இடம்பெற்றுள்ளார். 


நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவோன் கான்வே, ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, இஷ் சோதி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், ஆடம் சியர்ஸ்


ஜனவரி 12 முதல் தொடங்கும் போட்டிகள்: 


பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக ஜனவரி 12 முதல் ஜனவரி 21 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஆக்லாந்திலும், 2வது போட்டி ஹாமில்டனிலும், மூன்றாவது போட்டி டுனெடினிலும், நான்காவது-ஐந்தாவது போட்டி கிறிஸ்ட்சர்ச்சிலும் நடக்கிறது.


நியூசிலாந்து - பாகிஸ்தான் டி20 அட்டவணை:


1வது T20 - வெள்ளி, ஜனவரி 12, ஈடன் பார்க்


2வது T20 - ஞாயிறு, ஜனவரி 14, செடான் பார்க்


3வது டி20 - புதன், ஜனவரி 17, யுனிவர்சிட்டி ஓவல்


4வது T20 - வெள்ளி, ஜனவரி 19, ஹாக்லி ஓவல் 


5வது டி20 - ஞாயிறு, ஜனவரி 21, ஹாக்லி ஓவல்