T20 World Cup 2026: மீண்டும் அகமதாபாத்தா? வேணாம்ட மாப்ளே மோடில் ரசிகர்கள் - ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணை
T20 World Cup 2026 Schedule: இந்தியாவில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான, அட்டவணை தொடர்பான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

T20 World Cup 2026 Schedule: இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை
நடப்பு சாம்பியனான இந்தியா தலைமையில் அடுத்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, 20 அணிகள் பங்கேற்க உள்ள இந்த உலகக் கோப்பையானது பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2023ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை போன்று, இந்த முறையும் தொடக்க போட்டி மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாம். அதேநேரம், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான மும்பை வான்கடே மைதானத்தில் ஒரே ஒரு அரையிறுதிப் போட்டி மட்டுமே நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
வான்கடேவிற்கு ”நோ”
2011ம் ஆண்டு ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பையை தோனியின் சிக்சருடன் இந்தியா கைப்பற்றிய பிறகு, அந்த போட்டி நடைபெற்ற வான்கடே மைதானம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக மாறிப்போனது. தொடர்ந்து, 2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதியிலும், 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியிலும் இதே மைதானத்தில் விளையாடி தான் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2023ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியையும் கூட, வான்கடே மைதானத்தில் நடத்தி இருந்தால் இந்தியா வெற்றி பெற்று இருக்கும் என்பதே இன்றளவும் ரசிகர்களின் வருத்தமாக உள்ளது. முக்கியமான போட்டிகளை பொறுத்தவரையில், அகமதாபாத் மைதானம் இந்தியாவிற்கு ராசியற்றதாகவே கருதப்படுகிறது.
போட்டி நடைபெற உள்ள மைதானங்கள்:
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பைக்கான இறுதி செய்யப்பட்ட அட்டவணை அடுத்த சில தினங்களில் வெளியாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் அகமதாபாத், மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாம். அதேநேரம், இலங்கையை பொறுத்தவரை கொழும்பு மற்றும் கண்டியில் போட்டிகள் நடத்தப்படக்கூடுமாம். பயிற்சி ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெறும் என்றும், ஆனால் அவை சின்னசாமி மைதானத்தில் நடைபெறுமா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை பாகிஸ்தானுக்கு தனி திட்டம்:
உலகக் கோப்பைக்கான அட்டவணையை தயார்படுத்துவதில், பிசிசிஐக்கு ஐசிசி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாம். அதன்படி,
- லீக் சுற்றை தாண்டி ஒருவேளை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் சூழல் ஏற்பட்டால், அந்த போட்டியும் இலங்கையின் கொழும்புவில் நடைபெறுமாம்
- இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறினால் அவர்கள் விளையாடும் அரையிறுதி போட்டியும் கொழும்புவில் நடத்தப்படுமாம்
20 அணிகள்.. 4 குழுக்கள்..
2024ம் ஆண்டு நடைபெற்ற அதே பாணியிலேயே 2026ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. 20 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்று நடைபெறும். அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 13 அணிகளுடன் சேர்த்து கனடா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், ஓமன் மற்றும் நமீபியா ஆகிய அணிகளும் லீக் சுற்றில் களமிறங்க உள்ளன.
கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு இந்தியா டி20 உலகக் கோப்பையை நடத்தியது. அதன் அரையிறுதியில் தோனி தலைமையிலான அணியையும், இறுதிப்போட்டியில் இங்கிலாந்தையும் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.




















