1975 மற்றும் 1979ல் நடந்த முதல் இரண்டு உலக கோப்பைகளில் குரூப் ஸ்டேட்டிலேயே வெளியேறிய இந்திய அணி, 1983ல் உலக சாம்பியனாகும் என யாரும் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். இரண்டு முறை சாம்பியனான  அணியின் வெற்றி பயணத்தை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி தடுத்து நிறுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் கபில்தேவ் அணியின் சாதனையை இந்தியா மீண்டும் செய்ய 28 ஆண்டுகள் ஆனது.


இந்த இடைப்பட்ட காலத்தில் முகமது அசாருதீன், சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்களும் அணிக்கு கேப்டனாக இருந்தனர். ஆனால் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி மட்டுமே 2011 ம் ஆண்டு இரண்டாவது முறையாக பட்டத்தை வென்றது. இப்போதும் இந்திய மண்ணில் அக்டோபர் 5 முதல் தொடங்கும் உலகக் கோப்பை போட்டியிலும் ரோஹித் ஷர்மாவிடம் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவும் இதையே எதிர்பார்க்கிறது.


தோனியின் வெற்றி சதவீதம் 82.35:


மகேந்திர சிங் தோனியின் தலைமையில் 2011 மற்றும் 2015 உலகக் கோப்பைகளில் இந்தியா விளையாடியது. 2007 டி-20 உலகக் கோப்பையை வென்ற தோனியின் அணி, அவரது முதல் ஒருநாள் உலகக் கோப்பையிலும் தொடர்ந்தது. அந்த அணி இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இந்த சீசனில் அந்த அணி ஒன்பதில் ஏழு வெற்றிகளைப் பெற்றது. ஒரு போட்டியில் தோல்வியடைந்து, ஒரு போட்டி டை ஆனது. 2015ல், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. 2015 ஒருநாள் உலகக் கோப்பை சீசனில் எட்டு போட்டிகளில் ஏழில் வெற்றி பெற்றது. இதன்மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் 17ல் 14ல் வெற்றியும், இரண்டில் மட்டும் தோல்வியும் கண்ட இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனிதான்.


கபில்தேவ்:


 முதல் இரண்டு உலகக் கோப்பைகளில் இந்தியாவிற்கு தலைமை தாங்கியவர் ஸ்ரீனிவாஸ் வெங்கடராகவன். அதில் அவர் மொத்தம் 6 போட்டிகளில் விளையாடி ஒன்றை மட்டுமே வென்றார். கபில்தேவ் 1983 மற்றும் 1987ல் கேப்டன் பதவியை ஏற்றார். இவரது தலைமையில் இந்திய 15 போட்டிகளில் விளையாடி 11-ல் வெற்றியும் பெற்றது.


கபில்தேவ் தலைமையில் 1983ல் இந்திய அணி முதல் முறையாக சாம்பியனாகவும், 1987ல் இரண்டாவது முறையாக அரையிறுதிப் போட்டிக்கு சென்றது. இதன்மூலம், கபில்தேவின் வெற்றி சதவீதம் 73.33. முகமது அசாருதீன் 1992, 1996 மற்றும் 1999 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக மூன்று முறை கேப்டனாக இருந்தார். இந்த காலகட்டத்தில், அசார் மொத்தம் 23 போட்டிகளில் தலைமை தாங்கி அதில் 10 வெற்றிகளை மட்டுமே பெற முடிந்தது. சவுரவ் கங்குலி 2003 உலகக் கோப்பையில் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று 11 போட்டிகளில் ஒன்பதில் வெற்றி பெற்றார். 2007 ஆம் ஆண்டில், ராகுல் டிராவிட் தலைமையில் குரூப் ஸ்டேஜில் வெளியேறியது. மூன்றில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.


முதலிடத்தில் ரிக்கி பாண்டிங்: 


ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 2003-2011 உலகக் கோப்பையில் தலைமை தாங்கி 29 போட்டிகளில் 26 வெற்றியை பெற்று தந்தார். அவரது வெற்றி சதவீதம் அதிகபட்சமாக 89.65 ஆகும். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிளைவ் லாயிட் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது தலைமையின் கீழ், வெஸ்ட் இண்டீஸ் அணி 1975 மற்றும் 1983 ஆண்டுகளில் 17 போட்டிகளில் 15 வெற்றிகளை பெற்றுள்ளது, லாயிட்டின் வெற்றி சதவீதம் 88.23 ஆகும். இந்தப் பட்டியலில் இந்தியாவின் மகேந்திர சிங் தோனியின் பெயர் மூன்றாவது இடத்தில் உள்ளது.