மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) 2023 இன் எட்டாவது போட்டியில் டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் (LAKR) மற்றும் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் (SFU) அணிகள் மோதிக்கொண்டன. LAKR வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடியாக ஆடி 42 ரன் குவித்து பரபரப்பான இன்னிங்ஸை ஆடினார். அதோடு ஸ்டேடியத்திற்கு வெளியே இரண்டு மிகப்பெரிய சிக்ஸர்களை அடித்து பார்வையாளர்களை குதூகலப்படுத்தினார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் vs சான் பிரான்சிஸ்கோ
முதல் பந்து வீசிய LAKR பந்துவீச்சாளர்கள் SFU பேட்டர்களை கட்டுப்படுத்தத் தவறினர். இதனால் சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. மேத்யூ வேட் 41 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் குவித்து தனது அணியின் அதிகபட்ச ஸ்கோரைப் பெற்றதோடு மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க உதவினார். கோரி ஆண்டர்சன் 20 பந்துகளில் 39 ரன்கள் குவித்து ஒரு அதிரடி கேமியோ ஆடினார்.
அதிரடி காட்டிய ஜேசன் ராய்
LAKR பந்துவீச்சாளர்களில், ஆடம் ஜம்பா நான்கு ஓவர்கள் வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய, லாஸ் ஏஞ்சல்ஸ் அணி ஆரம்பத்தில் நன்றாகத் தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தனர். ஜேசன் ராய் 21 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில், ஐந்தாவது ஓவரில் ஹாரிஸ் ரவுஃப் வந்து வீச்சில், ஆட்டமிழந்தார்.
தாமதமாக வந்த ரஸ்ஸல் அதிரடி
ராய் ஆட்டமிழந்த பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே வந்தாலும், ரசல் (42) இறுதியில் விரைவாக ரன்களைச் சேர்த்து தனது அணியின் நம்பிக்கையை உயிர்ப்பித்தார். இருப்பினும், அவரது வானவேடிக்கை ஆட்டம் கை மீறி சென்ற பிறகுதான் வந்தது. இதனால் இந்த போட்டியில் LAKR அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பார்கிங்கில் சென்று விழுந்த பந்து
இந்த ஆட்டத்தில் அவரது இன்னிங்ஸின் போது, ரஸ்ஸல் இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை விளாசினார். அந்த நான்கு சிக்சர்களில் இரண்டு ஸ்டேடியத்திற்கு வெளியே அனுப்பப்பட்டது. வாகனம் நிறுத்துமிடத்தில் ஒரு பந்து சென்று விழுந்தது கேமராவில் படம்பிடிக்கபட்டது, அது பலரை வியப்பில் ஆழ்த்தியது. லியாம் பிளங்கெட்டின் பந்து வீச்சில் 17வது ஓவரின் இரண்டாவது பந்தில் ரஸ்ஸல் அடித்த பெரிய சிக்ஸர்தான், பார்க்கிங் லாட் வரை பந்தை கொண்டு சென்றது. அதன் பிறகு ரஸ்ஸல், ஹாரிஸ் ரவுஃப் வீசிய 18வது ஓவரில் அடித்த இரண்டாவது சிக்ஸர், பந்தை 108 மீட்டர் தூரம் கொண்டு சென்றது. இந்த சிக்ஸர், எம்எல்சி-யில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய சிக்ஸ்ராக பதிவாகியுள்ளது.