இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணிக்கு எதிராக 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி பேட்டிங்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரர்களான அனாமுல் ஹக் மற்றும் லிட்டன் தாஸ் வந்த வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 35 பந்துகளில் 21 ரன்கள் அடித்து வெளியேறினார்.
வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஷகில் அல் ஹாசன் 20 பந்துகளில் 8 ரன்களை எடுத்திருந்தபோது, வாஷிங்டன் சுந்தர் வீசிய 17 வது ஓவரை எதிர்கொண்டார். அப்போது அடிக்க முயற்சித்த ஷகிக் அல் ஹாசன் பந்தை மேலே உயர்த்தி ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
தொடர்ந்து, கடந்த சில போட்டிகளாக சொதப்பிவரும் முஷ்பிகுர் ரஹீம் 24 பந்துகளில் 12 ரன்கள் எடுத்துபோது மீண்டும் வாஷிங்டன் சுந்தர்- தவான் ஜோடி பிரிக்க, அடுத்து வந்த அஃபிஃப் ஹொசைனும் தான் சந்தித்த முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
சிறந்த பார்ட்னர்ஷிப்:
அதன்பிறகு, மஹ்முதுல்லாஹ் உடன் ஜோடி சேர்ந்த அஃபிஃப் ஹொசைன் இந்திய அணியின் பந்துவீச்சை பதம் பார்க்க தொடங்கினர்.
60 ரன்களுக்கே 6 விக்கெட்களை தடுமாறியபோது ஜோடி சேர்ந்த இந்த ஜோடி தலா அரைசதங்கள் கடந்து பார்ட்னர்ஷிப்பாக 148 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் வங்கதேசத்தின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்தனர்.
முன்னதாக, கடந்த 2014ல் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் அனாமுல் ஹக் பிஜோய் ஜோடி நடந்த ஆசிய கோப்பை போட்டியில் மூன்றாவது விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்தனர். இதுவே இந்தியாவிற்கு எதிராக வங்கதேசத்தின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை மஹ்முதுல்லா மற்றும் மெஹிடி முறியடித்துள்ளனர்.
அதேபோல், கடந்த 2005 ம் ஆண்டு, இலங்கை வீரர்களான உபுல் சந்தனா மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர் தம்புல்லாவில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் சேர்த்தனர். இதுவே இந்தியாவிற்கு எதிராக 7வது விக்கெட் பார்ட்னர் ஷிப்க்கு அதிக ரன் குவித்த ஜோடி என்ற சாதனையை படைத்திருந்தது. தற்போது மஹ்முதுல்லா மற்றும் மெஹிடி ஜோடி ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக ஏழாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் அமைத்து ஜோடி என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளது.
இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்கு:
96 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த மஹ்முதுல்லாஹ், உம்ரான் மாலிக் வீசிய 47 வது ஓவரில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து உள்ளே வந்த நாசூம் அகமது தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து 18 ரன்கள் குவிக்க, மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற மெஹிதி ஹசன் 83 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அசத்தி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களும், முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலில் தலா 2 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர். தற்போது 41 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.