அசாம் மாநிலம் கவுகாத்தியில் காட்டு யானை ஒன்றை ரயில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. 


ரயில் மோதி விபத்து:


மனிதர்களின் ஆக்கிரமிப்பால் காடுகளின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மீதமிருக்கும் காடுகளின் பரப்பளவை காப்பாற்றிக்கொள்ள அந்தந்த மாநில அரசுகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. ஆனால் மறுபுறம் காடுகள் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன.


குறிப்பாக ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இச்சூழலில் தான் நேற்று சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்று பார்ப்போரை கண்கலங்கச் செய்தது. அதாவது, அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தின் வழியாக கஞ்சன்ஜங்கா எனும் விரைவு ரயில் வேகமாக சென்றிருக்கிறது. அப்போது எதிர்பாராதவிதமாக காட்டு யானை ஒன்று தண்டவாளத்தை கடக்க முயற்சித்திருக்கிறது. ஆனால் அதற்குள் வேகமாக வந்த ரயில், யானை மீது பயங்கரமாக மோதியுள்ளது.


பரிதாபமாக உயிரிழந்த யானை:


இதில் யானை அலறியவாறு சுருண்டு விழுந்துள்ளது. பின்னர் சிறிது நேரம் கழித்து எழுந்து நிற்க முயன்றிருக்கிறது. தட்டு தடுமாறி எழுந்து பக்கத்தில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றிருக்கிறது. ஆனால் முடியவில்லை. அங்கேயே வலியால் துடித்து உயிரிழந்தது. இதனை ரயிலில் பயணித்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்திருக்கிறார்.


இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரும், கேகேஆர் அணி வீரருமான வருண் சக்கரவர்த்தி "ரயில் மோதி யானை உயிரிழந்த சம்பவத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.


வேதனையின் உச்சத்திற்கு சென்ற வருண்:





இது தொடர்பாக அவர்  இன்று(ஜூலை 11) வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,"இந்தப் பிரச்சினை தொடர்பாக அதிகாரத்தில் உள்ளவர்கள் தயவுசெய்து இதுபோன்ற மரணங்கள் தொடர்பாக ஏதேனும் தீர்வைக் கொண்டு வரமுடியுமா? அல்லது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதா..?? இந்தப் பிரச்சினை தொடர்பாக யாராவது எனக்கு தெளிவுபடுத்த முடியுமா!! இது மனவேதனை அளிக்கிறது" என்று வேதனை பட கூறியுள்ளார்.