கிரிக்கெட் உலகில் 150 டி-20 போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை என்ற பெருமையை, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் பெற்றுள்ளார்.


150 டி-20 போட்டிகள்:


கடந்த 2009ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக, ஹர்மன் பிரீத் கவுர் முதன்முறையாக டி-20 போட்டிகளில் களமிறங்கினார். இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் களமிறங்கியதன் மூலம், ஒட்டுமொத்த ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் 150 டி20 போட்டிகளில் விளையாடும் முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.  மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சுசி பேட்ஸ் 143 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.


3000 ரன்களை எட்டி சாதனை:


அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் 20 பந்துகளை எதிர்கொண்ட ஹர்மன் பிரீத் கவுர், 13 ரன்களை சேர்த்தார். அதில், 7 ரன்களை சேர்த்தபோது டி-20 போட்டிகளில் மூவாயிரம் ரன்களை பூர்த்தி செய்தார். இதன் மூலம் டி-20 போட்டிகளில் மூவாயிரம் ரன்களை கடந்த உலகின் நான்காவது மற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதற்கு, முன்னதாக நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் 3764 ரன்கள் குவித்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 3346 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்டாபானி டெய்லர் 3166 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.  இந்திய ஆடவர் அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஏற்கனவே மூவாயிரம் ரன்களை குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


டி-20 பேட்டிங் விவரங்கள்:


33 வயதான ஸ்மிருதி மந்தனா டி-20 வரலாற்றில் ஒரே போட்டியில் 103 ரன்களை சேர்த்து, இந்திய வீராங்கனைகளில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் கொண்டவராக விளங்குகிறார். 70 சிக்சர்களை அடித்து இந்தியாவிற்காக அதிகபட்ச சிக்சர்கள் அடித்த வீராங்கனைகளின்  பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.


 


உலகக்கோப்பையில் சாதனை:


அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கேப்டனாக செயல்பட்டதன் மூலம், டி-20 உலகக்கோப்பை தொடரில் அதிக முறை இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர் என்ற முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை முறியடித்துள்ளார். இன்றைய போட்டியுடன் சேர்த்து 14 முறை டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணியை அவர் வழிநடத்தியுள்ளார். 2009க்குப் பிறகு நடைபெற்ற அனைத்து உலகக்கோபை தொடர்களிலும் விளையாடியுள்ள ஹர்மன் பிரீத் கவுர், 34 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 500 ரன்களை சேர்த்துள்ளார்.


மகளிர் பிரீமியர் லீக்:


நடப்பாண்டு தொடங்கும் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் மும்பை அணியால், ஹர்மன் பிரீத் கவுர் ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளார்.  5 அணிகளை கொண்ட இந்த தொடர் வரும் 4ம் தேதி தொடங்க உள்ளது.