தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தன்னுடைய இரண்டாவது சதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இதன் மூலம் அதிக சதம் விளாசிய இந்திய வீராங்கனை என்ற மிதாலி ராஜின் சாதனை சமன் செய்தார்.


இந்தியா - தென்னாப்பிரிக்கா:


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது. இதில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி இன்று (ஜூன் 19) பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. 


மிதாலி ராஜின் சாதனை சமன்:


டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள்.


இதில் 38 பந்துகள் களத்தில் நின்ற ஷஃபாலி வர்மா 20 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து வந்த தயாளன் ஹேமலதா 24 ரன்களில் நடையைக் கட்டி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் ஸ்மிருதி மந்தனா. அந்தவகையில் சர்வதேச ஒரு நாள் போட்டியில் தன்னுடைய 7வது சதத்தை பதிவு செய்தார் மந்தனா.





103 பந்துகளில் 100 ரன்களை கடந்த அவர் மொத்தம் 120 பந்துகள் களத்தில் நின்று 18 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 136 ரன்களை குவித்தார். இதன் மூலம் அதிக சதம் விளாசிய இந்திய வீராங்கனை என்ற மிதாலி ராஜின் சாதனை சமன் செய்தார்.


அதேபோல் கடந்த ஜூன் 16 ஆம் தேதி நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் சதம் விளாசியிருந்தார். அந்த போட்டியில் 117 ரன்களை குவித்திருந்தார். தங்களுடைய முதல் போட்டியில் இந்திய அணி 145 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இருந்தது. 


அதேபோல் இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். கடைசி வரை களத்தில் நின்ற அவர் 88 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 103 ரன்களை குவித்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் ஹர்மன் ப்ரீத் கவுர். இவ்வாறாக இந்திய அணி இன்றைய போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் விளாசி இருக்கிறது.