இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஏற்கனவே ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணி 2-1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
தொடர்ந்து நேற்றுமுன்தினம் கவுகாத்தியில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதில் வெற்றிபெறும் முனைப்பில் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 15ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியின்போது டிக்கெட் கட்டணத்தின் மீது 5 சதவீதம் மட்டும் கேளிக்கை வரியாக விதிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டணத்தின் மீது 12 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியத்தின் மேல் அடுக்கு டிக்கெட்டின் விலை ₹1,300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதில் 18 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 12 சதவீத கேளிக்கை வரி எல்லாம் சேர்த்து,டிக்கெட்டின் விலை ₹2,600 ஆக வருகிறது.
இதையடுத்து, போட்டியை நடத்தும் கேரள கிரிக்கெட் சங்க 12% சதவீத கேளிக்கை வரியை குறைக்க அம்மாநில அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்த சூழலில், 12 சதவீத கேளிக்கை வரியை அரசு குறைக்குமா என்று விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துல்ரஹிமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அமைச்சர், “ வரியை குறைத்தாலும் இதனால் சாமானியர்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த முறை வரி குறைக்கப்பட்ட போதிலும் டிக்கெட் கட்டணம் குறையவில்லை. இதன் காரணமாக போட்டி அமைப்பாளர்கள் அதிக லாபம் ஈட்டக்கூடாது என்பதற்காகவே தற்போது குறைக்கப்படவில்லை. அத்தியாவசிய செலவுகள் அதிகமாக இருப்பதால் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மக்கள் பேசுவதை நானும் கேட்டேன். ஒருவர் பசியால் அவதிப்பட்டால், அந்த நபர் போட்டியை பார்க்க வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்தார்.
கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் இவ்வாறு பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
பட்டினியால் வாடும் மக்கள் கிரிக்கெட் போட்டியை பார்க்க வேண்டியதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமானின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.