இந்தியா - பாகிஸ்தான் போட்டி உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது.
IND vs PAK T20 WC 2026: எகிறிய விமான டிக்கெட் விலை - நைட்டுக்கு ஒரு லட்சமா? கொழும்புவை சுத்து போட்ட ரசிகர்கள்
IND vs PAK T20 World Cup 2026: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி காரணமாக, கொழும்புவிற்கான விமான டிக்கெட் மற்றும் ஓட்டல் அறைகளுக்கான விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

IND vs PAK T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி, உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்தியா Vs பாகிஸ்தான்: உச்சகட்ட எதிர்பார்ப்பு
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடங்கி ஒரு வாரம் ஆனாலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும், மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த முக்கியமான போட்டி இன்று தான் நடைபெற உள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. பரம எதிரிகளாக கருதப்படும் இரு அணிகளும், அரசியல் பிரச்னைகள் காரணமாக நேரடி போட்டிகளில் பங்கேற்பதில்லை. ஐசிசி தொடர்கள் மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே எதிரெதிராக களம் காண்கின்றன. அந்த வகையில் கடந்த செப்டம்பருக்குப் பிறகு இன்று தான் முதன் முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது.
கொழும்புவில் குவியும் ரசிகர்கள்
உலகிலேயே அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்படும் மற்றும் அதிக வருவாயை ஈரக்கக் கூடிய போட்டியாக, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் விளங்குகிறது. இதனை தொலைக்காட்சி மற்றும் ஒடிடி செயலிகளில் காண்பதோடு, நேரடியாக மைதானத்தில் காணவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக உள்ளூர் ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்தும் ஏராளமானோர் கொழும்புவில் குவிய தொடங்கியுள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும், இடைத்தரகர்களிடம் கூடுதல் விலைக்கும் பலர் டிக்கெட்டை வாங்கி போட்டியை காண ஆர்வமுடன் அங்கு பயணித்துள்ளனர். இதனால், கொழும்புவிற்கான விமான டிக்கெட் மட்டுமின்றி, அங்குள்ள ஓட்டல் அறைகளுக்கான கட்டணமும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
ஒரு நைட்டுக்கு ஒரு லட்சமா?
அதிகப்படியான தேவை காரணமாக, மும்பை, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இந்திய நகரங்களிலிருந்து, கொழும்புவிற்கான விமான கட்டணம் 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படுகிறது. வழக்கமான காலகட்டங்களில் இந்த கட்டணம் வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோக கொழும்புவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் ஒரு இரவிற்கான கட்டணம் ஒரு லட்சம் ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. 14ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரையில், பெரும்பாலான ஓட்டல்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளனவாம். இதன் விளைவாக அந்த பகுதிகளில் உள்ள வியாபாரமும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக, உள்ளூர் வாசிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கோடிகளில் புரளும் வருவாய்..
விமான டிக்கெட் மற்றும் ஓட்டல் கட்டணம் என்பதை தாண்டி, ஐசிசி பங்குதாரர்களும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மூலம் மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்ட உள்ளனர். அதன்படி, இந்த குறிப்பிட்ட போட்டியின் போது தொலைக்காட்சியில் விளம்பரம் ஒளிபரப்ப 10 நொடிகளுக்கு ரூபாய் 30 லட்சம் முதல் ரூபாய் 40 லட்சமாக கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, மற்ற போட்டிகளின்போது இந்த கட்டணம் ரூபாய் 20 முதல் ரூபாய் 25 லட்சமாகவே இருக்கும். ஓடிடி தளமான ஜியோ - ஹாட்ஸ்டாரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது 10 நொடிகள் விளம்பரம் ஒளிபரப்ப ரூபாய் 15 முதல் 20 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார்கள், பைக் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவில் தங்களது நிறுவனங்களை விளம்பரப்படுத்த, ஒளிபரப்பாளர்களை அணுகியுள்ளம. காரணம் இந்த போட்டியை நேரடியாக பல ஆயிரம் பேர் பார்ப்பதை தாண்டி, தொலைக்காட்சி வாயிலாக சுமார் 20 கோடி பேரும், ஒடிடி வாயிலாக சுமார் 20 முதல் 30 கோடி பேரும் கண்டுகளிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
Frequently Asked Questions
இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி எப்போது, எங்கே நடைபெறுகிறது?
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் ஏன் அரிதாக நடைபெறுகின்றன?
அரசியல் பிரச்சனைகள் காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் பங்கேற்பதில்லை. ஐசிசி தொடர்கள் மற்றும் ஆசிய கோப்பைகளில் மட்டுமே மோதுகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண ரசிகர்கள் கொழும்புவில் குவிந்துள்ளனரா?
ஆம், ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் போட்டியை காண கொழும்புவில் குவிந்துள்ளனர். இதனால் விமான மற்றும் ஹோட்டல் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் போட்டியால் யாருக்கு அதிக வருவாய் கிடைக்கும்?
ஐசிசி பங்குதாரர்கள், தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்கள் விளம்பரங்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டும். விளம்பரக் கட்டணங்கள் வழக்கத்தை விட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.





















