IND vs PAK: சுழல்தான் முக்கியம்..! பெஞ்சில் உட்காரப்போகும் அர்ஷ்தீப்.. உள்ளேவரப்போகும் லெஜண்ட்?
IND vs PAK T20 World Cup: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் சுழல் ஆதிக்கம் செலுத்தும் என்று கருதப்படுவதால் அர்ஷ்தீப்சிங்கிற்கு பதிலாக குல்தீப் யாதவ் களமிறங்குவார் என்று கருதப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு நாடுகள் இடையே உறவில் பிரச்சினை இருப்பதால் ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றனர்.
இன்னும் சற்று நேரத்தில்:
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இன்று இலங்கையின் கொழும்பு நகரில் குவிந்துள்ளனர். இந்த போட்டியைக் காண்பதற்காக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கொழும்பு நகரில் முகாமிட்டுள்ளனர்.
சுழல் ஆதிக்கம்:
போட்டி நடக்கும் பிரேமதாசா மைதானத்தில் சுழலின் ஆதிக்கம் அதிகளவு இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த டி20 உலகக்கோப்பையில் இந்த மைதானத்தில் நடந்த 3 போட்டிகளில் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே 20 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்கள் 21 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
சுழற்பந்துவீச்சாளர்களை காட்டிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் 1 விக்கெட் அதிகமாக வீழ்த்தியிருந்தாலும் சுழற்பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக வீசியுள்ளனர். போட்டி நடக்க உள்ள கொழும்புவில் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக இருப்பதால் மைதானத்தின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் இன்று இருக்கும் என்றே கருதப்படுகிறது. பனிப்பொழிவிற்கான வாய்ப்புகள் குறைவே என்றும் கூறப்படுகிறது.
அர்ஷ்தீப் வெளியே? குல்தீப் உள்ளே?
மைதானம் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் இருக்கும் என்பதால் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப்சிங்கிற்கு பதிலாக குல்தீப்யாதவ் உள்ளே கொண்டு வரப்படுவார் என்று கூறப்படுகிறது. அப்படி செய்தால் வேகப்பந்துவீச்சில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பிரதானமாக இருப்பார்கள். சுழலில் குல்தீப், வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேல் ஆகியோர் பிரதானமாக இருப்பார்கள். இவர்களுடன் கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக ஷிவம் துபே இருப்பார் என்று கருதப்படுகிறது. சஞ்சு சாம்சன் பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டு அவருக்கு பதிலாக அபிஷேக் சர்மா களமிறங்க உள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த போட்டி 7 மணியளவில் தொடங்க உள்ளது. தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸிலும், ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் காணலாம்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்கும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட எல்இடி திரையில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
பேட்டிங் பலம்:
இந்திய அணியில் பேட்டிங், பந்துவீச்சு வலுவாகவே உள்ளது. இந்திய அணியில் அபிஷேக் சர்மா, இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிங்குசிங், ஷிவம் துபே, அக்ஷர் படேல் என நீண்ட பேட்டிங் ஆர்டர் உள்ளது. பாகிஸ்தான் அணியில் பேட்டிங் சற்று பலவீனமாகவே உள்ளது.
சையும் அயூப் - ஃபர்ஹான் ஜோடி தொடக்கத்தில் சிறப்பாக ஆடுவார்கள். பாபர் அசாம், உஸ்மான் கான், ஷதாப் கான் ஆகியோர் மிடில் ஆர்டரில் உள்ளனர். அவர்களது பந்துவீச்சில் ஷாகின் அப்ரீடி, முகமது நவாஸ், அஷ்ரஃப், அர்ப்ரார் அகமது ஆகியோர் உள்ளது.




















