IND vs PAK: 10 நொடிக்கு 40 லட்சம் பில்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டியால் டிவி, ஓடிடி வசூல் வேட்டை!
IND vs PAK T20 World Cup 2026: டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது 10 நொடிகள் விளம்பரம் ஒளிபரப்பு செய்ய 40 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே சுமூகமான உறவு இடையே இல்லாததால் இரு நாட்டு கிரிக்கெட் அணிகள் இடையே நேரடி கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்தப்படுவது இல்லை. இதனால், இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே நேரடியாக மோதி வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி:
இதையடுத்து, தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை லீக் சுற்றில் ஆடுகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு விறுவிறுப்பும், எதிர்பார்ப்பும் உருவாகும். தொலைக்காட்சியிலும், ஓடிடி தளத்திலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பல கோடி உயர்வதும் வழக்கம்.
10 நொடிக்கு 40 லட்சம் ரூபாய்:
நாளை நடக்கும் போட்டியின்போது தொலைக்காட்சிகளிலும், ஓடிடி தளங்களிலும் விளம்பரங்களை ஒளிபரப்ப கட்டணங்களை அந்தந்த நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. அதாவது, இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது தொலைக்காட்சியில் விளம்பரம் ஒளிபரப்ப 10 நொடிகளுக்கு ரூபாய் 30 லட்சம் முதல் ரூபாய் 40 லட்சமாக கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, மற்ற போட்டிகளின்போது இந்த கட்டணம் ரூபாய் 20 முதல் ரூபாய் 25 லட்சமாக இருப்பது வழக்கம்.
ஓடிடி தளமான ஜியோ - ஹாட்ஸ்டாரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது 10 நொடிகள் விளம்பரம் ஒளிபரப்ப ரூபாய் 15 முதல் 20 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார்கள், பைக்குகள் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவில் தங்களது நிறுவனங்களை விளம்பரப்படுத்த அணுகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹோட்டல், விமான டிக்கெட் கட்டணம் உயர்வு:
மேலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு கொழும்பு நகரத்தின் வர்த்தகமும் அதிகரித்துள்ளது. டெல்லியில் இருந்தும், இந்தியாவின் பிற நகரங்களில் இருந்தும் இலங்கைக்கு ரசிகர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், போட்டி நடக்கும் கொழும்பு நகரத்தைச் சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் அறைகள் நிரம்பியுள்ளது. விடுதி உரிமையாளர்களும் அறைகளின் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளனர்.
மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் போட்டியைக் காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் படையெடுத்துள்ளதால் விமான டிக்கெட் கட்டணத்தையும் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது.
சூடுபிடித்த வர்த்தகம்:
இந்தியா - பாகிஸ்தான் போட்டி காரணமாக இலங்கையின் கொழும்பு நகரில் சிறிய வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகளின் வர்த்தகம் வரை வழக்கத்தை விட பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஓடிடி தளத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் ஒளிபரப்பாகிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாளை இரவு 7 மணிக்கு கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடக்கிறது.
இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாவிட்டாலும், இளம் இந்திய அணி இந்த தொடர் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சல்மான் அலி அகா தலைமையிலான பாகிஸ்தான் அணியும் அடுத்தடுத்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருகிறது. தோல்வியே காணாத இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.




















