இந்தியா- இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றன. இதில் நாட்டிங்ஹமில் நடைபெற்ற முதல் போட்டி சமனில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. ஐந்தாவது போட்டி கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மீதமுள்ள போட்டி இந்தாண்டு ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை இந்த போட்டி நடக்கவுள்ளது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் லீசெய்ஸ்டர் அணிக்கு எதிராக ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை 4 நாட்கள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
இதற்கிடையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரோகித்சர்மா, ஹோட்டலில் உள்ள அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் யார் இந்திய அணியை தலைமையேற்று நடத்தப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கே.எல்.ராகுல் காயத்தால் விலகியதால் அவருக்கு பதிலாக ஜஸ்ப்ரித் பும்ரா துணைகேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில், ரோகித்சர்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அணியை பும்ரா வழிநடத்துவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.
அதேநேரத்தில், தென்னாப்பிரிக்க தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப்பண்டிடம் கேப்டன்ஷிப் ஒப்படைக்கப்படுமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது. அணியின் எதிர்காலம் கருதி இந்த முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் ஆட்டம் தொடங்குவதற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய துணைக்கண்டத்தில் இருந்து வரும் பார்வையாளர்களை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய நேரப்படி மதியம் 3 மணி முதல் இந்த போட்டியை ரசிகர்கள் கண்டு மகிழலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்