இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. 


சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் டிசம்பர் 14-18 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் ஷேரே பங்களாவில் நடைபெறும். டிசம்பர் 22 முதல் 26 வரை தேசிய மைதானத்திலும் நடைபெறுகிறது. 


வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 


இதையடுத்து, முதலில் களம் புகுந்த கே.எல்.ராகுல், சுபமன் கில் ஆகியோர் நிலைத்து நின்று ஆடவில்லை. இருவருமே சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் ஆற்றல் பெற்ற புஜாரா சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.






அவர் 203 பந்துகளில் 90 ரன்கள் எடுத்திருந்தபோது டைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முன்னதாக விராட் கோலி வந்த வேகத்தில் 1 ரன்னில் நடையைக்கட்டினார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், அக்சர் படேல் ஆகியோரும் நிலைத்து நிற்காமல் ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் 46 ரன்களில் மெஹிடியிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.


ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஸ்டம்ப்பில் பந்து பட்டு தப்பிய ஸ்ரேயாஸ் ஐயர். 84வது ஓவரை எட்பதாத் ஹுசைன் வீசினார். 84ஆவது ஓவரின் 5ஆவது பந்தை அவர் வீசியபோது பந்து ஸ்டம்பில் பட்டு நழுவிச் சென்றது. ஸ்டம்ப்பில் ஒளிரும் விளக்குகளும் எரிந்தன. எனினும், ஸ்டம்ப்பின் மேல் வைக்கப்பட்டிருக்கும் இரண்டு பெயில்ஸ் (bails) கீழே விழவில்லை.


இதனால், நூலிழையில் ஆட்டமிழக்காமல் தப்பினார். ஸ்டம்பில் பந்து பட்டாலும் அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும் இரண்டு சிறிய குச்சிகள் கீழே விழுந்தால் தான் அவுட் என அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, இந்தியா - வங்கதேச அணிகள் இதுவரை 11 முறை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், இந்தியா 9 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இதுவரை இந்திய அணி, வங்கதேசத்திற்கு எதிராக ஒருமுறை கூட தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைத்துள்ளது.