இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கான காரணத்தை, இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரிஷப் பண்ட் விளக்கியுள்ளார். அது என்ன என்பதை பார்க்கலாம்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வி
கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 159 ரன்களுக்கு சுருண்ட நிலையில், இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, தென்னாப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சில் 153 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இந்தியாவிற்கு 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மைதானம் பந்துவீச்சிற்கு சாதகமாக அமைந்ததால் ஜான்சென், ஹார்மர், கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் மிரட்டினர்.
இளம் வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாக, கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்த ஏமாற்றமளித்தார். இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் நிதானமாக ஆட, அவருடன் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற துருவ் ஜுரேல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, முதல் இன்னிங்சில் சொதப்பிய ரிஷப் பண்ட் 2 ரன்னில் அவுட்டானார். 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் பறிபோன நிலையில், ஜடேஜா - வாஷிங்டன் சுந்தர் ஜோடி நிதானமாக ஆடியதால், இந்திய அணி 50 ரன்களை கடந்தது.
இந்நிலையில், இந்திய அணி 64 ரன்களை எடுத்திருந்தபோது, ஜடேஜா 18 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து, தனி ஆளாக போராடிக் கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அதன்பின்னர் டெயிலெண்டர்களை வைத்துக்கொண்டு அக்ஷர் படேல் சிறிது போராடினார். ஆனால், குல்தீப் யாதவ் 1 ரன்னில் அவுட்டாக, அக்ஷர் படேல் 17 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். காயம் காரணமாக கடைசி வரை கேப்டன் கில் களமிறங்காததால், இந்திய அணி 93 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது. இதனால், தென்னாப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோல்வி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் கூறியது என்ன.?
இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய ரிஷப் பண்ட், இப்படிப்பட்ட ஒரு போட்டி குறித்து, நாம் அதிகமாக ஆழ்ந்து யோசிக்கக் கூடாது என்று தெரிவித்தார். மேலும், இந்த ஸ்கோரை நாம் சேஸ் செய்திருக்க வேண்டும், இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்கள் மீது அழுத்தம் அதிகரித்தது என்று கூறினார்.
அதோடு, பவுமா மற்றும் போஷ் ஆகியோர் அபாரமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர் என்றும், அதன்மூலம் அவர்கள் ஆட்டத்திற்குள் திரும்பி வந்தனர் என்றும், பிட்ச் அவர்களுக்கு உதவியது என்றும் தெரிவித்தார். 120 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் சற்று சவாலான இலக்குதான் என்று கூறிய ரிஷப் பண்ட், ஆனால் ஒரு அணியாக நாங்கள் அழுத்தத்தில் இருந்து மீள முடியாமல் தோல்வியடைந்து விட்டோம் என்று தெரிவித்தார். மேலும், நாங்கள் வலுவாக திரும்பி வருவோம்” என்றும் உறுதிபடக் கூறினார்.