Four Women Score Centuries In The Same ODI: மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றுள்ளது.
முன்னதாக நேற்று இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெற்றுதான் இந்திய அணி தொடரை வென்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் மரிசான் கப் மற்றும் லாரா வோல்வார்ட் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். இது மகளிர் கிரிக்கெட்டில் இன்று வரை படைக்கப்படாத புதிய சாதனையாக பதிவானது.
அடுத்தடுத்து 4 சதங்கள்:
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் நான்கு சதங்கள் அடித்தது புதிய சாதனையாக அமைந்தது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடந்த போட்டியில், நான்கு வெவ்வேறு வீரர்கள் சதம் அடித்தனர். இது பெண்கள் ஒருநாள் வரலாற்றில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிக சதங்களாக பதிவானது.
முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இங்கிலாந்தில் உள்ள ஹோவ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மூன்று வீரர்கள் சதம் அடித்திருந்தனர். தற்போது இந்த சாதனையையே இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது போட்டியில் முறியடிக்கப்பட்டது.
யார் யார் எவ்வளவு ரன்கள் குவித்தனர்..?
ஸ்மிருதி மந்தனா:
இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 120 பந்துகளில் 113.3 ஸ்ட்ரைக் ரேட்டில் 18 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 136 ரன்கள் எடுத்தார்.
ஹர்மன்ப்ரீத் கவுர்:
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 88 பந்துகளில் 117.05 ஸ்டிரைக் ரேட்டில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார்.
லாரா வோல்வார்ட்:
லாரா வோல்வார்ட் 135 பந்துகளில் 100 ஸ்டிரைக் ரேட்டில் ஆட்டமிழக்காமல் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 135 ரன்கள் எடுத்திருந்தார்.
மரிசானே கப்:
மரிசான் கப் 94 பந்துகளில் 121.28 ஸ்ட்ரைக் ரேட்டில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 114 ரன்கள் எடுத்திருந்தார்.
போட்டி சுருக்கம்:
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்களை எடுத்திருந்தது. இதனையடுத்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க மகளிர் அணி களமிறங்கியது.
இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க மகளிர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.