வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணி, அந்த நாட்டில் உள்ள டிரினிடாட்டில் முதல் ஒருநாள் போட்டியில் ஆடி வருகிறது, இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ஷிகர்தவானும், சுப்மன்கில்லும் அபாரமான தொடக்கத்தை அளித்தனர்.


தவான் நிதானமாக ஆட, சுப்மன்கில் அதிரடியாக ஆடினார். அபாரமாக ஆடிய சுப்மன்கில் அரைசதம் அடித்தார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன்கில்லை அந்த அணியின் கேப்டன் நிகோலஸ் பூரண் அபாரமாக ரன் அவுட் செய்தார். இதனால், 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 64 ரன்களில் சுப்மன்கில் வெளியேறினார். அவருக்கு பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் ஷிகர்தவானுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இந்த ஜோடியும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது.




நிதானமாக ஆடிய ஷிகர்தவானும் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விளாசினார். அவர் சதமடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் ஸ்கோர் 213 ரன்களை எட்டியபோது 99 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்ஸருடன் 97 ரன்கள் எடுத்திருந்த தவான் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் சிறப்பாக ஆடி வந்த ஸ்ரேயாஸ் அய்யரும் அவுட்டானார். அவர் 57 பந்துகளில்  5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 54 ரன்களில் அவுட்டானார்.


35.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 230 ரன்களை எடுத்திருந்ததால், அடுத்து வந்த சூர்யகுமார்யாதவ் – சாம்சன் ஜோடி அதிரடியாக ஆடும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. சூர்யகுமார் யாதவ் 13 ரன்களிலும், சாம்சன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், கடைசி கட்டத்தில் இந்தியாவின் ரன்வேகம் கீழ் இறங்கத் தொடங்கியது.








தீபக்‌ஹூடா – அக்ஷர் படேல் ஜோடி ஓரளவு சிறப்பாக ஆடியது. தீபக்ஹூடா மிகவும் பொறுமையாக ஆடினார். அக்‌ஷர் படேல் 21 ரன்களில் அவுட்டானார். இறுதியில்  இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அல்ஜாரி ஜோசப், மோட்டி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண