IND Vs SA WC Final: கைக்கு எட்டும் தூரத்தில் கோப்பை.. கோட்டை விட்ட ரோகித், ஹர்மன் சாதிப்பாரா? தெ.ஆப்., உடன் ஃபைனல்..
IND Vs SA WC Final: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

IND Vs SA WC Final: இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் இடையேயான இறுதிப்போட்டி வரும் நவம்பர் 2ம் தேதி நவிமும்பையில் நடைபெற உள்ளது.
உலகக் கோப்பை ஃபைனல் - இந்தியா Vs தென்னாப்ரிக்கா
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்ரிக்காவும், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்த இரு அணிகளுமே இதுவரை உலகக் கோப்பையை வென்றதே இல்லை. இதையடுத்து வரும் நவம்பர் 2ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி, முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற உள்ளது. அது யார்? என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். நவி மும்பையில் உள்ள டி.ஆர். ஒய்.பாட்டில் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
இந்திய அணியின் ஃபைனலுக்கான பயணம்..
உள்ளூரில் உலகக் கோப்பை எளிதாக அரையிறுதிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, லீக் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வென்று அசத்தியது. ஆனால், அதற்கடுத்து தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடனான போட்டிகளில் தொடர் தோல்வியை கண்டு அதிர்ச்சி அளித்தது. அரையிறுதி வாய்ப்பு என்பதே கேள்விக்குறியானது. கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சுழலில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக செயல்பட்டு நான்காவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. வங்கதேச அணிக்கு எதிரான கடைசி லீக் சுற்று போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்நிலையில் தான், லீக் சுற்றில் மோசமான தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, அரையிறுதியில் களமிறங்கியது. 339 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய அணி சேஸ் செய்ய வாய்ப்பே இல்லை என கூறப்பட்டது. ஆனால், அதனை சாத்தியமாக்கி வரலாற்று வெற்றியுடன் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றில் மூன்றாவது முறையாக இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தெ.ஆப்., ஃபைனலுக்கான பயணம்:
லீக் சுற்றின் முதல் போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக வெறும் 69 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக தென்னாப்ரிக்கா அணி படுதோல்வியை சந்தித்தது. ஆனாலும், துவண்டுவிடாமல் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று கம்பேக் கொடுத்தது. அதன் பிறகு நடைபெற்ற 5 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியது. கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்வியுடன் அரையிறுதியில் களமிறங்கிய தென்னாப்ரிக்கா, லீக் சுற்றில் பெற்ற தோல்விக்கு பழிவாங்கும் விதமாக இங்கிலாந்தை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதன் மூலம் ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக தென்னாப்ரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
கோட்டை விட்ட ரோகித்.. சாதிப்பாரா ஹர்மன்?
கடந்த 2023ம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில், கடும் ஆதிக்கம் செலுத்திய ரோகித் சர்மா தலைமையிலான அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது. இதனால், உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இந்திய ஆடவர் அணி கோட்டை விட்டது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உள்ளூர் ரசிகர்களுக்கு முன்பாக உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது. அதனை ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையிலான அணி சாதிக்குமா? என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். லீக் சுற்று தோல்விக்கு ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் பழிவாங்கியபடியே, இறுதிப் போட்டியில் தென்னாப்ரிக்காவை பழிவாங்கினால் இந்திய அணி தனது முதல் உலகக் கோப்பையை கையில் ஏந்துவது உறுதி என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.




















