இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது, இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணிக்காக டி காக் அபார சதம் விளாசியும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 270 ரன்களுக்கு சுருண்டது. 

Continues below advertisement

ரோகித் - ஜெய்ஸ்வால் அசத்தல்:

இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் ஆட்டத்தை தொடங்கினர். ஜெய்ஸ்வால் தொடக்கத்தில் தடுமாறினாலும் ரோகித் சர்மா பொறுப்பாக ஆடினார். யான்சென், நிகிடி, மகாராஜ், பார்ட்மன் ஆகியோர் வீசியும் இருவரும் அபாரமாக ஆடினார். கடந்த 2 போட்டியில் பெரியளவு ரன்கள் எடுக்காத ரோகித் சர்மா இந்த போட்டியில் முழு கவனத்துடன் ஆடினார். 

அதேசமயம் தனது வழக்கமான சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆட்டத்தை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகு ரோகித் சர்மா- ஜெய்ஸ்வால் ஜோடி அதிரடியாக ஆடியது. ஜெய்ஸ்வாலும் பின்னர் தடுமாற்றம் இன்றி ஆடத் தொடங்கினார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா அரைசதம் விளாசினார். ஜெய்ஸ்வாலும் அரைசதம் விளாசினார். இந்த ஜோடி 150 ரன்களை கடந்தது. 

Continues below advertisement

ரோகித்துக்கு மிஸ் - ஜெய்ஸ்வாலுக்கு எஸ்:

சிறப்பாக ஆடி அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ரோகித் சர்மா சதம் விளாசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், மகாராஜ் சுழலில் அவுட்டானார். அவர் பவுண்டரிக்கு விளாச முயன்ற பந்து மேலே எழும்ப அது ப்ரீட்ஸ்கேவிடம் கேட்ச்சாக மாறியது. ரோகித் சர்மா 73 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 75 ரன்கள் விளாசி அவுட்டானார். 

கடந்த 2 போட்டியிலும் சொதப்பிய ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் தான் சிறந்த தொடக்க வீரர் என்பதை நிரூபித்தார். அபாரமாக ஆடிய அவர் 111 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இந்திய அணி கேப்டன் சுப்மன்கில் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக தொடக்க வீரராக களமிறங்கி வரும் ஜெய்ஸ்வால் முதல் 2 போட்டியில் சொற்ப ரன்களில் அவுட்டானார். இன்று சதம் விளாசி அசத்தியுள்ளார்.

20 ஆயிரம் ரன்கள்:

முதல் போட்டியில் 57 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா, கடந்த போட்டியில் 14 ரன்கள் மட்டுமே விளாசினார். இதனால், இன்றைய போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை ரோகித் சர்மா பூர்த்தி செய்தார். அவர் சதம் விளாசாவிட்டாலும் இந்த போட்டியில் 75 ரன்கள் விளாசி ஆட்டத்தை இந்தியாவின் வசம் கொடுத்துவிட்டே பெவிலியன் திரும்பினார். இந்த போட்டியில் ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்களை எட்டி புதிய வரலாறை படைத்துள்ளார். இந்திய அளவில் சர்வதேச போட்டிகளில் சச்சின், ராகுல் டிராவிட், விராட் கோலி மட்டுமே இதுவரை இந்த சாதனையை படைத்திருந்தனர்.

இந்திய அணியின் டாப் ஆர்டர் அசத்தலாக இந்த தொடரில் செயல்பட்டது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. இன்னும் வெளியில் உள்ள சுப்மன்கில், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா விரைவில் அணிக்கு திரும்பினால் அணி மேலும் வலுவாகும். அதேசமயம், ப்ளேயிங் லெவன் சவாலானதாக மாறும்.