IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ஜெய்ஸ்வால் சதம், ரோகித் மற்றும் விராட் கோலி அபார அரைசதத்தால் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஆடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், ஒருநாள் தொடரின் கடைசி போட்டி இன்று நடந்தது.
ரோகித் - ஜெய்ஸ்வால் அதிரடி:
விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி டி காக் சதம் விளாசியும் மிடில் ஆர்டர், டெயிலண்டர்கள் சொதப்பியதால் 270 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் - ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கம் அளித்தனர்.
முதல் இரண்டு போட்டியிலும் சொதப்பிய ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் பொறுப்புடன் ஆடினர். ரோகித் சர்மா வழக்கமான பாணியில் ஆடினார். யான்சென், நிகிடி, மகாராஜ் என யார் வீசியும் இந்த ஜோடியை பிரிக்க இயலவில்லை. அபாரமாக ஆடிய ரோகித் சர்மா அரைசதம் விளாசினார். அவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வாலும் அரைசதம் விளாசினார்.
ஜெய்ஸ்வால் சதம்:
பவுண்டரியும், சிக்ஸரும் விளாசிய ரோகித் சர்மா சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 75 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார். இதையடுத்து, முதல் 2 போட்டியில் அடுத்தடுத்து சதம் விளாசிய விராட் கோலி களமிறங்கினார். ரோகித் சர்மா ஏற்கனவே ஆட்டத்தை இந்தியாவின் வசம் கொண்டு வந்திருந்த நிலையில், விராட் கோலி வழக்கத்தை விட அதிரடியாக ஆடினார்.
அவரது அதிரடியால் ஜெய்ஸ்வால் எந்தவித அழுத்தமும் இன்றி ஆடினார். அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் சதம் விளாசினார். முதல் 2 போட்டியில் சிறப்பாக ஆட முடியாத ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் சதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து விராட் கோலி ஆட்டத்தை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார்.
விராட் கோலி அபார அரைசதம்:
யான்சென், நிகிடி, மகாராஜ், பார்ட்மென், போஸ்ச் என யார் வீசினாலும் அதிரடியாகவே ஆடினார். இதனால், அரைசதம் விளாசினார். கடைசியில் இந்திய அணி 39.5 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 121 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்ஸருடன் 116 ரன்களுடனும், விராட் கோலி 45 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 65 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
பார்ட்மென் 7 ஓவர்களில் 60 ரன்களை விட்டுக்கொடுத்தார். தொடர் நாயகன் விருதை இரண்டு சதம், அரைசதம் விளாசிய விராட் கோலி தட்டிச் சென்றார். டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தபோதிலும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. அடுத்து இரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.




















