தென்னாப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் சதம் கடந்து 122* ரன்களுடன் களத்தில் இருந்தார். அவருடன் ரஹானே 40* ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். 


 இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று செஞ்சுரியனில் காலை முதல் பலத்த மழை பெய்தது. காலை முழுவதும் மழை பெய்த காரணத்தால் மைதானத்தில் அதிகமாக தண்ணீர் சூழந்து இருந்தது. அத்துடன் ஆடுகளத்தில் ஈரப்பதமும் அதிகமாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆடுகளத்தை ஆய்வு செய்த நடுவர்கள் இரண்டாவது நாள் போட்டியை நடத்த முடியாது என்ற முடிவு எடுத்தனர். இதன்காரணமாக ஒரு பந்து கூட விசப்படாத நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 






இன்று முழுவதும் மழை குறையும் பட்சத்தில் நாளை காலை அரை மணி நேரம் முன்பாக ஆட்டம் தொடங்கும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் உள்ளூர் வானிலை தகவலின்படி நாளை மற்றும் நாளை மறுநாள் அங்கு மழை வாய்ப்பு குறைவு என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் ஆட்டத்தின் 5ஆவது நாள் அன்று அங்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகவே இந்தப் போட்டியில் மழை குறுக்கீடு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக நேற்று  முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மாயங்க் அகர்வால் மற்றும் கே.எல்.ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக இருவரும் தென்னாப்பிரிக்க அணியின் முதல் 15 ஓவர்களை சிறப்பாக சமாளித்து அடினர். உணவு இடைவேளை வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்தது. உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது இருவரும் நிதான ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். 






சிறப்பாக ஆடிய மாயங்க் அகர்வால் அரைசதம் கடந்து அசத்தினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இவர் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின்னர் தற்போது மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். மேலும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் அடித்த மூன்றாவது ஜோடி என்ற பெருமையை ராகுல்-மாயங்க் அகர்வால் ஜோடி பெற்றது. 


மாயங்க் அகர்வால் 60 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.  அதன்பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் விராட் கோலி நிதானமாக ஆடி இந்திய ஸ்கோரை உயர்த்தினர். தேநீர் இடைவேளைக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி 35 ரன்கள் எடுத்திருந்த போது நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.  முதல் நாள் ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் சதம் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: பாக்சிங் டே சொதப்பல் டூ பாக்சிங்டே சதம் : கே.எல்.ராகுலும் டெஸ்ட் கிரிக்கெட்டும் !