இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை லீக் சுற்று போட்டி, இலங்கை நேரப்படி மாலை 7 மணிக்கு கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் தொடங்குகிறது.
IND vs PAK T20 WC 2026: வருண பகவான் வழிவிடுவாரா? பாகிஸ்தானை பொளக்குமா இந்தியா? கொழும்பு மைதானம் எப்படி?
IND vs PAK T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான லீக் சுற்று போட்டி இன்று நடைபெற உள்ளது.

IND vs PAK T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான லீக் சுற்று போட்டி, இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் டி20 உலகக் கோப்பையில் இருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துய், இந்தியாவிற்கு எதிரான லீக் சுற்று போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதனால் திட்டமிட்டபடி பிப்ரவரி 15ம் தேதி போட்டி நடைபெறுமா? நடைபெறதா? என பல்வேறு சந்தேகங்கள் நிலவியது. ஒருவழியாக பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு எதிரான போட்டியில் களமிறங்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தது. அதன்படி, உலகின் மிகவும் அதிகப்படியான வருவாயை ஈட்டக்கூடிய மற்றும் அதிக பார்வையாளர்களால் பார்கக் கூடிய கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறப்போவது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான்: எங்கு? எப்போது?
இந்தியா - பாகிஸ்தான் போட்டி இலங்கையின் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் மாலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. இதன் நேரலையை தொலைக்காட்சி அலைவரிசையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வர்க்கிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இரண்டு அணிகளும், இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று 4 புள்ளிகளை ஈட்டியுள்ளன. அதன்படி, புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய ரன் ரேட்டுடன் இந்தியா முதல் இடத்திலும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும் என்பதால், வெற்றிக்காக இரண்டு அணிகளும் கடும் முனைப்பில் உள்ளன.
இந்திய அணியின் பலம், பலவீனம்..
இந்திய அணி அனுபவம் வாய்ந்த வீரர்களோடு, அதிரடியான பேட்டிங்கிற்கான பயமறியாத பல இளம் வீரர்களையும் கொண்டுள்ளது. பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பது நேர்மறையான விஷயமாக கருதப்படுகிறது. உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வந்துள்ள அபிஷேக் சர்மா நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், இன்றைய போட்டியில் இஷான் கிஷன் உடன் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் சூர்யகுமார் மற்றும் ஹர்திக் ஆகியோர் மிரட்டலான ஃபார்மில் உள்ளனர். திலக் வர்மா, ஷிவம் துபே ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பவுலிங் யூனிட்டில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர். தொடர் வெற்றிகளை குவித்து வரும் பாகிஸ்தான், புள்ளிகளுக்காக இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்பதை, அரசியல் ரீதியான எண்ணங்களுக்காகவும் வெற்றி பெற முனைப்பு காட்டுகிறது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு, இந்திய பேட்ஸ்மேன்களின் திறமை சோதிக்க வாய்ப்புள்ளது.
இந்தியா - பாகிஸ்தான்: நேருக்கு நேர்
சர்வதேச டி20 போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி முறையும், பாகிஸ்தான் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக டி20 உலகக் கோப்பையில் 8 முறை மோதியதில் இந்தியா 7 வெற்றிகளை ஈட்டியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு உலகக் கோப்பையில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதே பாகிஸ்தானுக்கு கிடைத்த ஒரே ஒரு வெற்றியாகும்.
கொழும்பு மைதானம் எப்படி?
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அதே ஆடுகளத்தில் தான், இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என பாகிஸ்தான் அணி கேப்டனும் தெரிவித்துள்ளார். எனவே, மிடில் ஓவரில் பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக செயல்பட்டால் மட்டுமே ரன்களை சேர்க்க முடியும். அதிரடியான பேட்டிங்காக அல்லாமல், திறமையான கிரிக்கெட் விளையாடும் அணிக்கே இன்று வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.
வானிலை நிலவரம்:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி, மழையால் முழுமையாக ரத்தாக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. கடும் மின்னல்களுடன் கனமழை பொழியக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் மழைக்கு 55 முதல் 60 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி மழையால் போட்டி கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டு, இரு அணிகளுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.
உத்தேச பிளேயிங் லெவன்
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ்.
பாகிஸ்தான்: சல்மான் அலி ஆகா (கே), அப்ரார் அகமது, பாபர் அசாம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஷஹீன் ஷா அப்ரிடி, ஷதாப் கான் மற்றும் உஸ்மான் தாரிக்.
Frequently Asked Questions
இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி எப்போது, எங்கு நடைபெறுகிறது?
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை எங்கே பார்க்கலாம்?
இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும், ஜியோ ஸ்டார் செயலியிலும் பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இதுவரை எத்தனை முறை மோதியுள்ளன?
சர்வதேச டி20 போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 16 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 13 முறையும், பாகிஸ்தான் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?
மழையால் போட்டி கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் இரு அணிகளுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.




















