2023 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இன்று மோதல் உள்ளது. இந்த இரு அணிகளும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன . இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. கடந்த கால புள்ளிவிவரங்கள் முதல் தற்போதைய வடிவம் வரை, ஒவ்வொரு காரணியும் இந்திய அணியின் வெற்றியை நோக்கியே உள்ளது. அகமதாபாத்தில் பாகிஸ்தானின் தோல்வி ஏன் உறுதியாகத் தெரிகிறது? அதற்கான காரணங்கள் என்ன என்பதை இங்கே காணலாம்.
காரணம் எண் 1: இன்று வரை ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற முடியவில்லை. உலகக் கோப்பையில் இரு அணிகளும் மொத்தம் 7 முறை மோதி, இந்த 7 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று இந்திய அணி 8வது போட்டியில் வெற்றி பெற்று உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோல்வி அடையாத சாதனையை தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் எண் 2: உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா மொத்தம் 86 போட்டிகளில் விளையாடி 55ல் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், இந்திய அணியின் வெற்றி சதவீதம் 65 ஆக உள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் 81 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 47 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு பாகிஸ்தானின் வெற்றி சதவீதம் 59 மட்டுமே. அதாவது ஒட்டுமொத்த உலகக் கோப்பை வெற்றி, தோல்வி சதவீதத்தின் அடிப்படையில் கூட இந்திய அணி பாகிஸ்தானை விட முன்னிலை பெற்றுள்ளது.
காரணம் எண் 3: உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்கும் போதெல்லாம், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கூடுதல் அழுத்தத்தில் காணப்படுகின்றனர். இந்த அழுத்தம் அவர்களது பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் கூட வெளிப்படுகிறது. உலகக் கோப்பையில் இந்திய பேட்ஸ்மேன்களின் கேட்சுகளை பாகிஸ்தான் வீரர்கள் கைவிடுவது சகஜமான விஷயமாகி போகிறது. உதாரணத்திற்கு ஆசியக் கோப்பை இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது கூட பாகிஸ்தான் வீரர்களின் மோசமான பீல்டிங்கை பார்த்தோம்.
காரணம் எண்-4: இந்தப் போட்டியில் இந்திய அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடவுள்ளது. இந்திய வீரர்கள் அகமதாபாத் ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிவார்கள். எனவே இந்திய அணி இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வார்கள். மேலும், இங்குள்ள ஸ்டேடியம் இந்திய அணியின் ரசிகர்களால் நிரம்பி வழியும். இது இந்திய வீரர்களின் மன உறுதியை உயர்த்த உதவும்.
காரணம் எண்-5: ஐசிசியின் ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்திலும், பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
காரணம் எண்-6: பாகிஸ்தானை விட இந்திய அணி தங்களது பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் முந்தைய ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்துள்ளனர். ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் பின் வரிசையில் நல்ல பார்மில் உள்ளனர். மாறாக, பாகிஸ்தானின் பேட்டிங் முகமது ரிஸ்வானைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. இவர்களைத் தவிர ஒரு சில பேட்ஸ்மேன்கள் மட்டுமே அவ்வபோது ரன்களை எடுத்து வருகின்றனர்.
காரணம் எண் - 7: நீண்ட நாள் காயம் காரணமாக விளையாடாத ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு திரும்பியது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மிகவும் ஆபத்தானதாகத் தோன்றத் தொடங்கியது. பின், சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இந்திய மூவர் களமிறங்கி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய அணி பந்துவீச்சில் நல்ல சமநிலையுடன் உள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் அணி நல்ல வேகப்பந்து வீச்சைக் கொண்டிருந்தாலும், சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரை, இந்த அணி பின்தங்கியிருப்பதாகத் தெரிகிறது.