IND vs PAK Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றனர். பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடி வருகிறது. முன்னதாக, இந்திய அணியை எதிர்த்து முதலில் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு செளத் ஷகில், ரிஸ்வான், குஷ்தில் ஷா ஆகியோரின் பங்களிப்பால் இந்த ரன்களை பாகிஸ்தான் எட்டியது.
பாகிஸ்தானுக்கு உதவிய குஷ்தில்ஷா:
பாகிஸ்தான் அணி 200 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஆடியபோது அவர்கள் 241 ரன்களை எட்ட உதவியது கடைசி கட்டத்தில் குஷ்தில் ஷாவின் பேட்டிங்கே ஆகும். அவர்தான் கடைசி கட்டத்தில் 39 பந்துகளில் 2 சிக்ஸர் அடித்து 38 ரன்கள் எடுத்தார்.
மனம் திறந்த குஷ்தில்:
பாகிஸ்தான் அணிக்கு தேர்வானது குறித்து குஷ்தில்ஷா கூறியிருப்பதாவது,
என்னை எப்படி அணியில் தேர்வு செய்தார்கள் என்று எனக்கேத் தெரியவில்லை. நான் தேர்வாளர்களின் பார்வையில் இருந்து இரண்டு வருடங்களாக விலகியே இருந்தேன். விமர்சனங்களை நான் மனதில் எடுத்துக்கொள்ளமாட்டேன். ஏனென்றால், மக்கள் பேசுவதை உங்களால் நிறுத்த முடியாது. என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து அணியின் வெற்றிக்கு உதவுவதே அவர்களுக்கான பதில் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய நம்பிக்கை நட்சத்திரம்:
30 வயதான குஷ்தில்ஷா 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இவர் இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் ஆடி 328 ரன்களை எடுத்துள்ளார். இதில் ஒரு அரைசதம் விளாசியுள்ளார். 27 டி20 போட்டிகளில் ஆடி 344 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கடைசி கட்டத்தில் உதவிய குஷ்தில் ஷா நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் கடைசி கட்டத்தில் உதவினார். கராச்சியில் நடந்த அந்த போட்டியில் குஷ்தில் ஷா 49 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 69 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணிக்கு பின்வரிசையில் புதிய அதிரடி பேட்ஸ்மேனாக குஷ்தில் ஷா உருவெடுத்துள்ளார்.
இவரை அணியில் தேர்வு செய்தபோது பாகிஸ்தான் அணியின் தேர்வாளர்களை அந்த நாட்டு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஃபகீம் அஷ்ரஃப்பிற்கு பதிலாக இவரை அணியில் தேர்வு செய்ததற்கு பலரும் விமர்சித்தனர். ஆனாலும், தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் தனது பேட்டிங்கால் பதில் அளித்து வருகிறார்.