ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்திய நிலையில் இனிமேல் இந்த போட்டிக்கு பில்டப் கொடுப்பதை நிறுத்துங்கள் இந்திய அணி கேப்டன் சூர்ய குமார் யாதவ் தெரிவித்தார்.
இந்தியா மீண்டும் வெற்றி:
ஆசியக் கோப்ப்பை லீக் சுற்றில் ஏற்கனவே பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில், நேற்று மீண்டும் சூப்பர் 4 சுற்றில் பாக் அணியுடன் இந்திய அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்களை எடுத்தது. இலக்கை துரத்திய இந்திய அணியில், தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடி பேட்டிங் ஆடினர். முக்கியமாக அபிஷேக் சர்மாபாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினார். இதனால் 18.5 ஓவர்கள் முடிவிலேயே இந்திய அணி இலக்கை எட்டி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா, 39 பந்துகளில் 74 ரன்களை விளாசி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சூர்யாகுமார் பேட்டி:
போட்டிக்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேப்டம் சூர்யாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது, அதில் பாகிஸ்தானின் செயல்திறன் மற்றும் வரலாற்றுப் போட்டியின் நிலை குறித்து கேட்கப்பட்டது, இதற்கு பதிலளித்த சூர்யா "இந்தக் கேள்விக்கு, நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் இந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி குறித்து கேள்விகள் கேட்பதை நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,"
"என்னைப் பொறுத்தவரை, இரண்டு அணிகள் 15-20 போட்டிகளில் விளையாடி, ஸ்கோர்லைன் 7-7 அல்லது 8-7 என இருந்தால், அதை நல்ல கிரிக்கெட் என்று அழைக்கலாம், நீங்கள் அதை போட்டி என்று அழைக்கலாம். அது 13-0, 10-1 என இருந்தால், நிலை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இது இனி ஒரு போட்டி அல்ல. 7-15 க்கு இடையில் நாங்கள் அவர்களை விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம், மேலும் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம்," என்று அவர் கூறினார்.
நேருக்கு நேர் எப்படி?
கடந்த 15 ஆண்டுகளில், இந்தியா பாகிஸ்தானை ஆதிக்கம் செலுத்தி வருகிறது, 31 போட்டிகளில் 23 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 210 சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் 88 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, அதே நேரத்தில் இந்தியா 78 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டெஸ்ட் போட்டிகளில், பாகிஸ்தான் 59 போட்டிகளில் 12 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது, இந்தியாவின் 9 போட்டிகளுடன் ஒப்பிடும்போது, 38 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. ஒருநாள் போட்டிகளில், இந்தியா 58 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது, பாகிஸ்தானின் 43 போட்டிகள். இருப்பினும், டி20 போட்டிகளில் தான் இந்தியா தெளிவான ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது, இதுவரை விளையாடிய 15 போட்டிகளில் 11 போட்டிகளில் பாகிஸ்தான் 3 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.