உலகக் கோப்பை 2023ன் முதல் அரையிறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இந்தியாவை நியூசிலாந்து எதிர்கொள்கிறது . லீக் சுற்றின் 9 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. எப்படியோ கடைசி நேரத்தில் உள்ளே வந்த நியூசிலாந்து அணி 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இருப்பினும், ஐசிசி உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியை இலகுவாக எடுத்துக்கொள்ள இந்திய அணி விரும்பாது. அதற்கு காரணம், 2019 உலகக் கோப்பையின் அரையிறுதியில் ஏற்பட்ட தோல்வியே. இதையடுத்து நியூசிலாந்து அணியை பழிவாங்கும் நோக்கில் ரோஹித் சர்மா அணி இன்று அதிரடியாக களமிறங்குகிறது. இது மட்டுமின்றி, 12 ஆண்டுகால வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, இம்முறை எப்படியும் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்று இந்திய அணி முயற்சிக்கும். 


2011ஆம் ஆண்டு முதல் இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை. கடைசியாக 2015ல் நடந்த உலகக் கோப்பை லீக் கட்டத்தில் முதலிடத்தில் இந்திய அணி இருந்த போதிலும், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா மோசமான தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த கதை 2019 இல் மீண்டும் தொடர்ந்தது. லீக் சுற்றில் இந்திய அணி சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. அப்போது நியூசிலாந்து அணி அரையிறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் இதயங்களை உடைத்தது.


பழித்தீர்க்குமா இந்திய அணி..? 


அரையிறுதியில் இந்த இரண்டு தோல்விகளிலிருந்தும் பாடம் கற்று கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதுதான் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு மிகப்பெரிய அழுத்தமாக இருக்கும். இந்திய வீரர்கள் நாக் அவுட் போட்டிகளின் அதிக அழுத்தத்தின் காரணமாக கையில் இருக்கும் போட்டியை தவறவிட்டு தோல்வியை சந்தித்து விடுகின்றனர். இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். அதேபோல், ஷ்ரேயாஸ் ஐயரும் 400 ரன்களுக்கு மேல், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பல போட்டிகளில் முக்கியமான இன்னிங்ஸ் ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளனர். 


பும்ரா தலைமையில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு இந்த உலகக் கோப்பையில் சிறப்பாகவே உள்ளது. இதுவரை முகமது ஷமி 4 போட்டிகளில் இரண்டு முறை தலா 5 விக்கெட்டுகளையும், ஒரு முறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் சுழலைப் புரிந்துகொண்டு விளையாடுவது மற்ற அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்திய அணி தனது 12 ஆண்டுகால வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்றே எதிர்பார்க்கலாம். 


தோனியின் ரன் அவுட்: 


2019 அரையிறுதியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை இந்திய அணி எளிதாக துரத்தும் என்றே அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் இலக்கை துரத்த வந்த இந்திய அணி வெறும் 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற தொடங்கியது.  அணியின் டாப் ஆர்டர் முற்றிலும் சரிந்து கவலையை இதன்பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்ததால் 71 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து நடையை கட்டியது. 


தொடர்ந்து, இந்திய அணி 92 ரன்களுக்கு ஆறாவது விக்கெட்டை இழந்தபிறகு ஏழாவது இடத்தில் வந்த மகேந்திர சிங் தோனியும், எட்டாவது இடத்தில் வந்த ரவீந்திர ஜடேஜாவும் அபாரமான இன்னிங்ஸ் விளையாடி அணியை 208 ரன்களுக்கு கொண்டு சென்றனர். இந்திய அணி எப்படியாவது வெற்றிபெற்றுவிடும் என எதிர்பார்த்த நிலையில்  48வது ஓவரில் ஜடேஜா 77 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அடுத்த ஓவரில் மகேந்திர சிங் தோனி 50 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். கப்டிலின் அந்த டைரக்ட் ஹிட் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் இதயங்களை உடைத்தது. இதன் பிறகு இந்திய அணி தோல்வியை சந்தித்து உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.