நியூசிலாந்து - இந்தியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி கான்வே, நிகோல்ஸ், மிட்செல் ஆகியோர் அரைசதத்தால் 301 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
28 ஆயிரம் ரன்கள்:
இதையடுத்து, ரோகித் - சுப்மன்கில் ஆட்டத்தை தொடங்கினர். சுப்மன்கில் நிதானமாக ஆட ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார். ரோகித் சர்மா 29 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர், கேப்டன் கில்லுடன் விராட் கோலி இணைந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி களமிறங்கியது முதலே அதிரடியாகவே ஆடினார்.
சுப்மன்கில் நிதானமாக ஆட விராட் கோலி பவுண்டரி மற்றும் ஓரிரு ரன்களாக எடுத்தார். இந்த பார்ட்னர்ஷிப் சிறப்பாக ஆடி அணியை இலக்கை நோக்கி கொண்டு செல்லத் தொடங்கியது. விராட் கோலி சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். மேலும், இந்த போட்டியின்போது சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
7 ரன்களில் தவறிய சதம்:
மறுமுனையில் சிறப்பாக ஆடிய சுப்மன்கில் 56 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து விராட் கோலி பொறுப்புடன் ஆடினார். சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கிய விராட் கோலி சதம் விளாசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் ஜேமிசன் பந்தில் ஏறி வந்து அடிக்க முயற்சித்தபோது ப்ராஸ்வெல் அந்தர்பல்டி அடித்து கேட்ச் பிடித்தார்.
இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறப்பாக ஆடிய விராட் கோலி 91 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 93 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். விராட் கோலி 7 ரன்களில் சதத்தை தவறவிட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும், சிறப்பாக ஆடிய அவரை ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர்.
அசத்தும் விராட் கோலி:
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி, கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் 2 சதங்கள், ஒரு அரைசதம் விளாசி அசத்தினார். விஜய் ஹசாரே கோப்பைத் தொடரிலும் ஒரு சதம், ஒரு அரைசதம் விளாசி அசத்திய நிலையில் இன்று 93 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். 2027 உலகக்கோப்பையில் ஆடுவதை இலக்காக கொண்டு ஆடி வரும் விராட் கோலி பிசிசிஐ தரும் அழுத்தத்திற்கு பதிலடி தரும் வகையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். இந்த போட்டியில் அவர் சதம் விளாசியிருந்தால் இது அவருடைய 54வது சதமாக அமைந்திருக்கும்.
இன்று கோலி மகள் பிறந்தநாள்:
விராட் கோலியின் மகள் வாமிகாவிற்கு இன்று பிறந்தநாள் ஆகும். வாமிகாவிற்கு இன்று 5 வயதாகிறது. இன்று சதம் விளாசி தனது மகளுக்கு அதை சமர்ப்பிக்க நினைத்த நிலையில், சதம் சாத்தியம் ஆகவில்லை. ஆனாலும், விராட் கோலியில் இன்னிங்ஸ் மிகவும் பாராட்டும் வகையில் அமைந்தது.