இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி கோலாகளமாக தொடங்கிய ஐசிசியின் 13வது உலகக் கோப்பைத் தொடரில் மொத்தம் 10 அணிகள் களமிறங்கின. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். இதில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில் தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதிகட்டத்தினை எட்டியுள்ளது. இந்த தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியாவும் நெதர்லாந்தும் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் மோதிக்கொண்டது. ஏற்கனவே இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இந்த போட்டி அட்டவணைப்படி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானம் செய்தது. இந்திய அணியின் இன்னிங்ஸை வழக்கம்போல் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி தொடங்கியது. இருவரும் தொடக்கம் முதல் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை விளாசினர். இதனால் என்ன செய்வது என்ற தெரியாமல் நெதர்லாந்து அணியின் கேப்டன் இருந்தார். இருவரும் தங்களது அரைசதத்தினை நோக்கி முன்னேற மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவார வெள்ளத்தில் குதித்தனர்.
அரைசதம் கடந்த நிலையில் சுப்மன் கில் சிக்ஸர் விளாச முயற்சி செய்கையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் களத்திற்கு விராட் கோலி வந்தார். அவர் ஆடுகளத்தை நோக்கி வரும்போது மைதானம் முழுவதும் நிரம்பியிருந்த இந்திய ரசிகர்கள் 'கோலி.. கோலி..’ என முழக்கமிட்டு வரவேற்றனர். களத்திற்கு வந்த விராட் கோலி தொடக்கத்தில் மிகவும் சிரமப்பட்டார். இதனால் ரன்ரேட் குறையத் தொடங்கியது. இந்த அழுத்தம் ரோகித் சர்மா மீது விழ, அவர் அதிரடியாக ஆட முயற்சி செய்து தனது விக்கெட்டினை இழந்தார். இதையடுத்து இணைந்த ஸ்ரேயஸ் - விராட் கோலி கூட்டணி சிறப்பாக விளையாடி அணியை மெல்ல மெல்ல வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
அணியின் ஸ்கோர் 200 ரன்களாக இருந்தபோது, விராட் 51 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதையடுத்து இணைந்த கே.எல். ராகுல் - ஸ்ரேயஸ் கூட்டணி நெதர்லாந்து பந்து வீச்சினை துவம்சம் செய்யும் பணியை திறம்படச் செய்தனர். இதனால் இந்திய அணியின் ரன்ரேட் சரளமாக உயரத் தொடங்கியது. இருவரும் அதிரடியாக தங்களது அரைசதத்தினைன் கடந்தது மட்டும் இல்லாமல் சதத்தை நோக்கியும் முன்னேறத் தொடங்கினர். இதன்மூலம் இந்திய அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் அரைசதம் கடந்து உலகக் கோப்பை வரலாற்றில் சாதனை படைத்தனர். இருவரும் கிடைத்த லாவகமான பந்துகளை சிக்ஸருக்கி விளாசினர். இவர்களின் ஆட்டத்தினை பார்க்கும்போது இந்திய அணி 400 ரன்களை எட்டுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதைப் போல இருந்தது.
அதிரடியாக விளையாடிய ஸ்ரெயஸ் ஐயர் தனது சதத்தினை எட்டினார். இது உலகக்கோப்பையில் தனது முதல் சதம் ஆகும். ஸ்ரேயஸ் ஐயர் சதம் விளாசிய பின்னர் கே.எல். ராகுலுக்கு அதிகப்படியான ஸ்ட்ரைக்கைக் கொடுத்தார். இதனால் கே.எல். ராகுல் சதத்தை நோக்கி முன்னேறினார். கே.எல். ராகுல் 102 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயஸ் ஐயர் 94 பந்தில் 128 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.