இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உத்தரபிரதேச சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் காயம் காரணமாக விசாகப்பட்டினத்தில் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி முதல் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார்கள்.


இந்நிலையில், இவர்களுக்கு பதிலாக இந்திய அணியில் மூன்று வீரர்களை பிசிசிஐ சேர்த்தது. இதில் சௌரப் குமார், சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம், ஜடேஜாவுக்குப் பதிலாக சௌரப் விளையாடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏனெனில், இவர் பந்துவீச்சாளர் மட்டுமின்றி, பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை தருவார். 


முதல் தர கிரிக்கெட்டில் சௌரப் சாதனை:


30 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் இதற்கு முன்பு இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.  ஆனால் இதுவரை சர்வதேச அரங்கில் அறிமுகமாகவில்லை. இதுவரை 68 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 290 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 64 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதே இவரது சிறந்த பந்துவீச்சாகும். இது தவிர, சௌரப் குமார் 27.11 என்ற சராசரியில் இரண்டு சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உள்பட 2061 ரன்களையும் எடுத்துள்ளார். 133 ரன்கள் இவரது சிறந்த ஸ்கோர் ஆகும். 


கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டார். சரியாக ஒரு வருடம் கழித்து, இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. இந்தநிலையில், தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தேர்வாகியுள்ள சௌரப் குமார் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.. 


யார் இந்த சௌரப் குமார்..? 


சௌரப் குமார் 10 வயதாக இருந்தபோது, ​​டெல்லியில் உள்ள தனது கிரிக்கெட் கனவுகளை நிறைவேற்றுவதற்காக பாக்பத், பாரௌத்தில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறினார். பயிற்சிக்காக 60 கிலோமீட்டர் தூரம் ரயிலில் செல்ல வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் அவரது தந்தை ரமேஷ் சந்த், சௌரப் கிரிக்கெட் விளையாட கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கவே, அதையும் மீறி தனது கிரிக்கெட் வாழ்க்கையை நோக்கி நகர தொடங்கினார். சௌரப்பின் தந்தை அகில இந்திய வானொலியின் ஆகாஷ்வானி பவனில் ஜூனியர் இன்ஜினியராக இருந்தார்.


வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் பயிற்சிக்காக பாரௌத்திலிருந்து டெல்லிக்கு செல்வதில் சௌரப் சிரமத்தை எதிர்கொண்டார். போட்டிகள் இருந்தபோது, ​​அதற்கேற்ப பயணங்களும் அதிகரித்தன. படிப்படியாக சௌரப் உ.பி.யின் வயது பிரிவு அணிகளில் இடம்பிடிக்கத் தொடங்கினார். 13 வயதுக்குட்பட்ட மற்றும் 15 வயதுக்குட்பட்ட அணிகளில் விளையாட தொடங்கி, 15 வயதில் ONGC க்கு கிரிக்கெட் உதவித்தொகையை பெற தொடங்கினார். அப்போது, கிரிக்கெட் ஜாம்பவான் பிஷன் சிங் பேடியிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.


இந்திய அண்டர் 19ல் விளையாட வாய்ப்பு: 


உத்தரப் பிரதேச அணிக்காக அண்டர்-16 மற்றும் அண்டர்-17க்குப் பிறகு, சௌரப்பும் அண்டர்-19 அணியில் சேர்ந்தார். ஆனால்,  உபி சீனியர் அணியில் இவருக்கான வாய்ப்பு கேள்விகுறியாக இருந்தது. அப்போது உபி அணியில் பியூஷ் சாவ்லா, அலி மொர்டாசா, பிரவீன் குப்தா, அவினாஷ் யாதவ், குல்தீப் யாதவ் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். இதற்கிடையில், இந்திய விமானப்படை அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டனர். உ.பி.க்காக விளையாடுவதற்கான உடனடி வாய்ப்புகள் இல்லாததால், 20 வயதான சௌரப் அவர்களின் வாய்ப்பை ஏற்றுக்கொண்டு  ஏர்மேன் வேலையை பார்த்தார். 


உ.பி. அணியில் இடம்:


சர்வீசஸ் அணியில் சேர்ந்த பிறகு, சௌரப் சிறப்பாக விளையாடி அசத்தினார். 2014-15ல் தனது அறிமுக சீசனில் ஏழு போட்டிகளில் 36 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கிடையில், உ.பி.யில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மொர்டாசா மற்றும் சாவ்லாவின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்க, அதே நேரத்தில், குல்தீப் இந்திய அணியில் இணைந்தார். மாநில தேர்வாளர்கள் சௌரப்பிடம் பேசினர். இந்த முடிவு அவரது குடும்பத்திற்கு எளிதானது அல்ல. சர்வீசஸ் டீமில் அவருக்கு நிரந்தர வேலையும் இருந்தது அத்தனையையும் விட்டுகொடுத்து சௌரப், தனது கனவுக்காக உ.பி. சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பும் ஏற்றுகொண்டார். 


உ.பி.க்கு முதல் போட்டியில் 10 விக்கெட்டுகள்


உத்தர பிரதேச அணியின் தேர்வாளர்கள் அவரை 23 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சேர்த்தனர். அதன்பிறகு, உ.பி. அணிக்காக களமிறங்கி 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் பின்னரே அவர் சீனியர் அணியில் சேர்க்கப்பட்டார். குஜராத்திற்கு எதிராக தனது சொந்த அணிக்காக தனது முதல் முதல் தர போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். தற்போது நீண்ட காத்திருப்புக்கு பிறகு சௌரப் குமாருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.