இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஒல்லி போப்பின் அசாத்திய பேட்டிங்கால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 420 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு எதிராக 230 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 231 ரன்கள் தேவையாக உள்ளது. 






இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது. இதில், முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 64.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்களும், பும்ரா மற்றும் அக்சார் படேல் தலா 2 விக்கெட்களையும் எடுத்திருந்தனர். 


அடுத்ததாக முதல் இந்திய அணி 121 ஓவர்களில் 436 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 80 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 180 பந்துகளில் 87 ரன்களும், கே.எல்.ராகுல் 123 பந்துகளில் 86 ரன்களும் எடுத்திருந்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்டுகளையும், டாம் ஹார்த்லி மற்றும் ரீகன் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.


இந்திய அணிக்கு தண்ணிக்காட்டிய போப்:


பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். சாக் கிராலி 33 பந்துகளில் 31 ரன்களும், பென் டக்கெட் 52 பந்துகளில் 47 ரன்களும் எடுத்து அவுட் ஆக, அதனை தொடர்ந்து ஒல்லி போப் களம் இறங்கி இந்திய அணிக்கு தண்ணிக்காட்ட தொடங்கினர். அவருடன் களமிறங்கிய ஜோ ரூட் 2 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோவ் 10 ரன்களும், அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களிலும், பென் ஃபோக்ஸ் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.






மறுபுறம் அதிரடியாக விளையாடி வரும் ஒல்லி போப் 278 பந்துகள் களத்தில் நின்று 196 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இவ்வாறாக இங்கிலாந்து அணி இன்றைய நாளில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 420 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. தற்போது இந்திய அணியை விட இங்கிலாந்து அணி 230 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை ஜஸ்ப்ரித் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்களும், ரவிசந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களும், ஜடேஜா 2 விக்கெட்களும், அக்சார் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். 


தற்போது இந்திய அணி 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இன்னும் முழுதாக இந்திய அணிக்கு ஒன்றரை நாள் உள்ளது. இதில், இந்திய அணி விக்கெட்களை விட்டுகொடுக்காமல் முழுவதும் நின்றாலே வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உண்டு.