இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் போட்டி நேற்று சவுதாம்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 198 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா 51 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து அணி 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் வீரராக களமிறங்கியிருந்தார்.
இந்நிலையில் இந்தப் போட்டியில் நடுவராக அலெக்ஸ் வார்ஃப் செயல்பட்டார். அவருக்கும் தினேஷ் கார்த்திகிற்கும் ஒரு சம்பந்தம் இருந்தது. அதாவது 18 ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய அணிக்கு முதல் முறையாக தினேஷ் கார்த்திக் அறிமுக வீரராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போட்டியில் அலெக்ஸ் வார்ஃப் இங்கிலாந்து அணிக்காக தன்னுடைய 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அந்தப் போட்டியில் அலெக்ஸ் வார்ஃப் கொடுத்த கேட்சை தினேஷ் கார்த்திக் பிடித்தார்.
தற்போது தினேஷ் கார்த்திக் 18 ஆண்டுகளுக்கு பிறகும் இந்திய அணியில் விளையாடி வருகிறார். ஆனால் அலெக்ஸ் வார்ஃப் நடுவராக செயல்பட்டு வருகிறார். அலெக்ஸ் வார்ஃப் 2018ஆம் ஆண்டு முதல் நடுவராக செயல்பட்டு வருகிறார். இவர் இங்கிலாந்து அணிக்கக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
2004ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமான தினேஷ் கார்த்திக் தற்போது வரை 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் 26 டெஸ்ட் மற்றும் 40 டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் களமிறங்கியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்