இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியில் நைட் வாட்ச் மேனாக களமிறங்கி இந்திய வீரர் ஆகாஷ் தீப் அரைசதம் அடித்தார்.
ஓவல் டெஸ்ட்:
கென்னிங்டன் ஓவலில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்டில், முதல் இன்னிங்ஸ்சில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியில் அதிகப்பட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் எடுத்தார்,
பின்னர் இதன் பிறகு, இங்கிலாந்து டி20 பாணியில் பேட்டிங் செய்தது. பென் டக்கெட் 38 பந்துகளில் 43 ரன்களும், ஜாக் க்ரோலி 57 பந்துகளில் 64 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அளித்தனர், ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் வலுவான கம்பேக் கொடுத்து இங்கிலாந்தை 247 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். இதன் மூலம், இங்கிலாந்து 23 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் இந்தியா விரைவில் கே.எல். ராகுல் 07 மற்றும் சாய் சுதர்சன் 11 ரன்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆகாஷ் தீப் அசத்தல்:
நேற்றைய நாளின் முடிவில் நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் ஜெய்ஸ்வாலுடன் இன்றைய நாளை தொடங்கினார். ஆட்டம் தொடங்கியதில் இருந்தே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆகாஷ் தீப், பவுண்டரிகளாக அடித்து இங்கிலாந்து பவுலர்களுக்கு தண்ணீ காட்டினார். நைட்வாட்ச்மேனாக வந்த ஆகாஷ்தீப் ஆகியோர் நிலைமையை மாற்றினர்.
ஆகாஷ்தீப் 66 ரன்கள் எடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பகிர்ந்து கொண்டனர். இப்போது இந்திய அணி 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில்167 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த முறை வெற்றி:
கடைசியாக 2021 ஆம் ஆண்டு கென்னிங்டன் ஓவலில் இந்திய அணி விளையாடியது. அப்போது இந்தியா இங்கிலாந்தை தோற்கடித்தது. இந்த மைதானத்தில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலும் இங்கிலாந்து முன்னிலை வகித்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் பிறகு, இங்கிலாந்து 99 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில், இந்தியா 466 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. அதற்கு பதிலளித்த இங்கிலாந்து அணி 210 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.