இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று அதாவது மார்ச் மாதம் 7ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சினால் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 


ரோகித் - சுப்மன்கில் சதம்:


அதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 135 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் இருந்தனர். இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் பந்துகளை நாலாபுறமும் விளாசித் தள்ளினர். இதனால் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் தங்களது சதத்தினை எட்டினர். இந்த தொடரில் இருவரும் தங்களது இரண்டாவது சதத்தினை எட்டியுள்ளனர். இவர்கள் இருவரையும் எப்படி கட்டுப்படுத்துவது எனத் தெரியாமல் இங்கிலாந்து அணி திணறி வந்தது. இறுதியில் இங்கிலாந்து அணிக்கு கைகொடுத்தது உணவு இடைவேளை. 


படிக்கல் - சர்பராஸ்கான் அரைசதம்:


மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் ரோகித் சர்மா (103) மற்றும் சுப்மன் கில் (110) ரன்களுக்கு தங்களது விக்கெட்டினை பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரது பந்துவீச்சில் தங்களது விக்கெட்டினை க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினர். அதன் பின்னர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கினார் தேவ்தத் படிக்கல். அவருடன் சர்ஃப்ராஸ் கான் இணைய இங்கிலாந்து அணிக்கு மீண்டும் தலைவலி தொடங்கியது. 


இந்த கூட்டணி சிறப்பாக விளையாடி 90 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் செய்தது. சர்ஃப்ராஸ்கான் அரைசதம் கடந்த நிலையில் 56 ரன்களுக்கு தனது விக்கெட்டினை இழந்தார். அதன் பின்னர் தனது அறிமுக டெஸ்ட்டில் அரைசதம் விளாசிய தேவ்தத் படிக்கல் 65 ரன்களுக்கு சோயிப் பஷிர் பந்தில் க்ளீன் போல்ட் ஆனார். அதன் பின்னர் வந்த ஜடேஜா, ஜூரேல் மற்றும் அஸ்வின் சொதப்ப இங்கிலாந்து அணியின் கரம் திடீரென உயர்ந்தது. 






255 ரன்கள் முன்னிலை:


அதன் பின்னர் களமிறங்கிய பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் கூட்டணி மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்கச் செய்யாமல் சிறப்பாக விளையாடினர். அதாவது இருவரும் இணைந்து இதுவரை 108 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளனர். இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 473 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி இதுவரை முதல் இன்னிங்ஸில் 255 ரன்கள் முன்னிலை வகிக்கின்றது.