19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் யஷ் துல் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. ஏற்கனவே, U19 உலகக்கோப்பையை நான்கு  முறை கைப்பற்றி இருக்கும் இந்திய அணி, ஐந்தாவது முறையாக வெல்லும் முனைப்பில் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 44.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்திருக்கிறது. இதனால், இந்திய அணி வெற்றி பெற 190 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற U19 இங்கிலாந்து அணி, பேட்டிங் தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து பேட்டர்களுக்கு இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. வந்த வேகவத்தில் ஓப்பனர் ஜேக்கப் பெத்தல், ரவி குமாரின் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதிரடி தொடக்கமாக அமைந்த இந்திய அணிக்கு, நான்காவது ஓவரில் இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தினார் ரவி குமார். ஆரம்பமே சொதப்பலாக அமைந்த இங்கிலாந்து அணிக்கு மேலும் சிக்கல் கொடுத்திருக்கிறார் இளம் வீரர் ராஜ் பவா. ரவி குமார் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது அடுத்து, வரிசையாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திருக்கிறார் ராஜ் பவா. 






அடுத்து களமிறங்கிய பேட்டர்களையும் ரன்கள் எடுக்கவிடாமல் பெவிலியன் அனுப்பி கொண்டே இருந்தனர் இந்திய பவுலர்கள். இங்கிலாந்து அணிக்காக ஒற்றை ஆளாக களத்தில் நின்று ரன் சேர்த்தார் ஜேம்ஸ் ரூ. இவர் மட்டும் 95 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த போராட, மற்ற பேட்டர்கள் சொற்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய பவுலர்களைப் பொருத்தவரை ராஜ் பவா 5 விக்கெட்டுகளையும், ரவி குமார் 4 விக்கெட்டுகளையும், கெளஷல் டம்பே 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இதனால், 44.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்திருக்கிறது இங்கிலாந்து அணி. இதனால், ஐந்தாவது முறையாக U19  உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல 190 ரன்கள் எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண