இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி நேற்று டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியின் முடிவுக்கு முன்னதாகவே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. 


ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.  இரு அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து கொண்டிருக்கும்போது நியூசிலாந்து இலங்கையை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, அவர்களின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவை தகர்த்தது. 


ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி வெற்றிக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இரண்டாவது இடத்தை பிடிக்க இந்தியா-இலங்கை இடையே போட்டி நிலவியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை தோல்வியை சந்தித்த பிறகு வெளியேறியது. இதன் மூலம், இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. 


இதையடுத்து, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் ஐசிசி போட்டியின் இறுதிப்போட்டியில் சந்திக்கின்றன. ஜூன் 7 முதல் 11 வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.


கடந்த 2003 ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது. இந்தியா 39.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை சாம்பியன் ஆனது. அந்த இறுதிப் போட்டியின் தோல்விக்கு பழிவாங்கும் முழு வாய்ப்பு இந்திய அணிக்கு தற்போது கிடைத்துள்ளது.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளன. இதையடுத்து, WTC இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர் மற்றொரு ICC கோப்பையை தங்களது பட்டியலில் புதிதாக இணைப்பர். 


இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் இந்தியா: 


இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதன் பிறகு, WTC இன் இறுதிப் போட்டிக்கு தொடர்ச்சியாக இரண்டு முறை நுழைந்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இருப்பினும், 2019-2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து இந்தியாவை தோற்கடித்தது.
 
இப்போது அதே நியூசிலாந்து இந்திய அணியை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதில் பெரும் பங்கு வகித்துள்ளது.


அகமதாபாத் டெஸ்டுக்கு முன்பு சாம்பியன்ஷிப்பின் போது ஆஸ்திரேலியா 18 போட்டிகளில் விளையாடியது. இதில் 11 வெற்றி, 3 தோல்வி மட்டுமே கிடைத்தது. பார்டர் கவாஸ்கர் தொடரில் மட்டும் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா இரண்டு தோல்விகளை சந்தித்தது. இந்தியா 17 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ரோகித் ஷர்மா அணி 5 தோல்விகளையும், 2 போட்டி டிராவில் உள்ளது.