இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற பிப்ரவரி 9 ம் தேதி முதல் தொடங்குகிறது. இதையடுத்து, தொடரை கைப்பற்றும் முயற்சியில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 


இந்த தொடரை இந்தியா வெல்ல கோலி என்னும் பிரம்மாஸ்திரம் திறம்பட செயல்பட வேண்டும். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாததால் கோலி மீது கூடுதல் பொறுப்பு உள்ளது. மேலும், இந்த தொடரில் கோலி பல சாதனைகளை முறியடிக்க வாய்ப்புகள் உள்ளன. 


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதங்கள்:


கோலி விளையாடும் இந்த காலக்கட்டத்தில் அவருக்கு பிடித்த எதிரணிகளில் ஆஸ்திரேலியா அணியும் ஒன்று. இந்த அணிக்கு எதிரான கோலி இதுவரை 7 சதங்கள் அடித்துள்ளார். இதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 


11 சதங்களுடன் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்த படியாக சுனில் கவாஸ்கர் 8 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். வருகிற தொடரில் குறைந்தது கோலி இரண்டு சதங்கள் அடித்தால், கவாஸ்கரை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவார். 


சேவாக் சாதனை முறியடிக்க வாய்ப்பு:


பார்டர்- கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்கின் மற்றொரு முக்கிய சாதனையை கோலி முறியடிக்க வாய்ப்புள்ளது. தற்போது, கோலி தனது டெஸ்ட் வாழ்க்கையில் 8119 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நான்கு டெஸ்டிலும் சேர்த்து அவர் 391 ரன்கள் எடுத்தால், இந்தியாவுக்காக டெஸ்டில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன் பட்டியலில் சேவாக்கை பின்னுக்கு தள்ளுவார். சேவாக் இதுவரை டெஸ்டில் 8503 ரன்கள் எடுத்துள்ளார். இந்த தொடரில் சேவாக்கை கோலி முந்தினால் இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் ரன்களை குவித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை பெறுவார். 


சச்சினை கடக்க வாய்ப்பு: 


இந்த டெஸ்ட் தொடரில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு முக்கியமான சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது, ​​கோலி அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 546 இன்னிங்ஸ்களில் 24,936 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் 64 ரன்களை கோலி எடுத்தால், சர்வதேச அளவில் 25,000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற வரலாறு படைப்பார். தற்போது இந்த சாதனை சச்சின் வசம் உள்ளது. சச்சின் 576 இன்னிங்ஸ்களில் 25 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். அதைவிட வேகமாக இந்த சாதனையை கோலி எட்டுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.