இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி மார்ச் 9ம் தேதி (இன்று) அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ளன. 


இந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 வெற்றிகள், 1 தோல்வியுடன் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டு டெஸ்ட் தோல்விக்கு பிறகு மீண்டெழுந்த ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை 3வது டெஸ்ட்டில்  வீழ்த்தியது. இந்த சூழலில் அகமதாபாத்தில் இன்று தொடங்கும் கடைசி போட்டியின் முடிவை பொறுத்தே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா..? என்பது தெரியும். 


ஆடுகளம் எப்படி? 


இந்த தொடர் முழுவதும் நடைபெற்ற போட்டிகள் அனைத்து ஆடுகளம் குறித்து இதுவரை பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. கடந்த மூன்று போட்டிகளில், நாக்பூர், டெல்லி, இந்தூரில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே பிட்ச் இருந்தது. இதேபோல், இன்று தொடங்கும் அகமதாபாத் டெஸ்ட் போட்டியிலும் சுழலுக்கு சாதகமாக பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சார் படேல் போன்ற உலகத் தரம் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அகமதாபாத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தால் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவது மிகவும் கடினம்.


யார் யாருக்கு வாய்ப்பு..? 


ரிஷப் பண்ட் இல்லாததால், இந்திய அணி விக்கெட் கீப்பருக்கான தேடலில் தவித்து வருகிறது. நாக்பூர் டெஸ்டில் அறிமுகமான கே.எஸ். பாரத் விக்கெட் கீப்பிங்லில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் பெரிதாக எந்தவொரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதையடுத்து, கே.எஸ். பாரத்திற்கு பதிலாக இந்திய அணி நிர்வாகம் இஷான் கிஷனை இந்த போட்டியில் களமிறக்கலாம். 


கடந்த போட்டியில் முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் களமிறக்கப்பட்டு, விக்கெட்களையும் வீழ்த்தினார். ஆனால், இந்த தொடரில் முகமது சிராஜ் பெரியளவில் விக்கெட் வேட்டையில் ஈடுபடவில்லை. எனவே இந்த போட்டியில் சிராஜுக்கு பதிலாக ஷமி மீண்டும் இடம் பெற வாய்ப்புள்ளது. 


பார்வையிடும் பிரதமர்கள்:


இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இன்று அகமதபாத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மைதானத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்டின் முதல் நாள் போட்டியை காண்கிறார். 


கடந்த 2021ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட இந்த மைதானம் நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இங்கு இரண்டு போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இன்றைய கணிக்கப்பட்ட அணி விவரம்: 


இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஆர் அஷ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ்.


ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், மாட் குஹ்னெமன், நாதன் லியான், டாட் மர்பி.