இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி ஆடிய விதம் ரசிகர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சொதப்பும் இந்திய பேட்டிங்:
முன்னணி வீரர்களான ரோகித், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோரின் பேட்டிங் கவலையளிக்கும் விதமாக உள்ளது. எதிர்கால இந்தியாவாக கருதப்படும் சுப்மன்கில், ரிஷப்பண்ட் ஆகியோரின் பேட்டிங்கும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஜெய்ஸ்வாலிடமும் சீரான ஆட்டம் இல்லை. மொத்தத்தில் இந்திய அணியில் பும்ராவைத் தவிர எந்த வீரரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
அணியின் வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை என்றபோதிலும், அணியின் வீரர்கள் எங்கிருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள்? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அதாவது, ஒரு காலத்தில் இந்திய அணிக்கான வீரர்கள் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் இருந்து அதிகளவு தேர்வாகி வந்தனர். ஏனென்றால், ரஞ்சி கிரிக்கெட் போட்டியானது டெஸ்ட் போட்டிக்குத் தேவையான மன வலிமை, பொறுமை ஆகியவற்றின் அடிப்படையைக் கொண்டு உருவானது.
ரஞ்சி வீரர்களுக்கு வாய்ப்பு மறுப்பு?
டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்கள் அங்கிருந்து தேர்வாகி வந்தனர். ஆனால், டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சிக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் ஆடும் வீரர்களுக்கே இந்திய அணியில் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணிக்குத் தேர்வான வீரர்கள் என்று யாரையும் சொல்ல இயலவில்லை. இந்திய அணியின் பிரதான டெஸ்ட் வீரர்களான புஜாரா, ஹனுமன் விஹாரி ஆகிய இருவர்தான் கடைசி 10 ஆண்டுகளில் இந்திய அணிக்காக ரஞ்சி தொடரில் இருந்து ஆடி வருகின்றனர்.
ரஞ்சியில் 10 ஆண்டுகள் அதிக ரன்கள்:
தற்போது இந்திய டெஸ்ட் அணியில் ஆடும் ஜெய்ஸ்வால், சுப்மன்கில், ரிஷப்பண்ட், நிதிஷ் ரெட்டி போன்ற பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி அணியில் இடம்பிடித்தவர்கள். ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களும் அதிகளவு டி20 போட்டிகள், ஐபிஎல் தொடரில் ஆடி டெஸ்ட் போட்டிக்கான மன நிலையையும், பொறுமையும் முற்றிலும் இழந்துவிட்டனர் என்பது நன்றாக இந்த தொடரில் தெரிகிறது.
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்காக உருவான ரஞ்சி கிரிக்கெட் தொடரில் இருந்து வீரர்கள் இந்திய அணிக்கு வரவில்லை என்பதற்கான உதாரணத்தை கீழே காணலாம். கடந்த 2015ம் ஆண்டு முதல் ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலை காணலாம்.
2015ம் ஆண்டு - ஸ்ரேயாஸ் ஐயர் (1321 ரன்கள்)
2016ம் ஆண்டு - பி.கே.பஞ்சால் (1310 ரன்கள்)
2017ம் ஆண்டு - மயங்க் அகர்வால் ( 1160 ரன்கள்)
2018ம் ஆண்டு - மயங்க் அகர்வால் ( 1331 ரன்கள்)
2019ம் ஆண்டு - தலால் (1340 ரன்கள்)
2022ம் ஆண்டு - சர்பராஸ் கான் ( 982 ரன்கள்)
2023ம் ஆண்டு - ஆர்.கே. பூய் ( 902 ரன்கள்)
2024ம் ஆண்டு - தன்மய் அகர்வால் ( 615 ரன்கள்)
இனி வாய்ப்பு வழங்கப்படுமா?
2015ம் ஆண்டு முதல் ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் இவர்கள். இவர்களில் மயங்க் அகர்வால், சர்பராஸ் கான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தவிர யாருமே இந்திய அணியில் வேறு யாரும் இடம்பிடித்தது கிடையாது. இவர்களும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதனாலும், அதிரடி பேட்ஸ்மேன்கள் என்பதாலும் அணியில் இடம் வழங்கப்பட்டது.
இந்திய அணிக்குத் தற்போது ராகுல் டிராவிட், லட்சுமணன், வாசிம் ஜாபர், புஜாரா, ரஹானே போன்று களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்கும் தரமான மன வலிமை கொண்ட வீரர்கள் தேவை. அவர்களைப் போன்று தரமாக தயாராகி வரும் ரஞ்சி வீரர்களுக்கு இனி டெஸ்ட் அணியில் இடம் வழங்கப்படுமா? அதற்கான முன்னெடுப்பை இந்திய அணி மேற்கொள்ளுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.