கடந்த ஒரு வருடமாக டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை பிசிசிஐ நீக்கியுள்ளது. கடந்த 2022 ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக நியமிக்கப்பட்டு, பின்னர் இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் நிரந்தர துணை கேப்டனாக ஆனார்.
அதனை தொடர்ந்து இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியை வழிநடத்தினார்.
இந்தநிலையில், கடந்த சில போட்டிகளாக சொதப்பி வரும் கே.எல். ராகுலை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படவில்லை என்றாலும், துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வரும் தொடர்களில் விளையாடும் லெவன் அணியில் கே.எல். ராகுல் தனது இடத்தை தக்க வைத்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடந்த சில போட்டிகளில் அனைத்துவிதமான போட்டிகளில் சதம் அடித்து சிறந்த பார்மில் சுப்மன் கில் இருக்கிறார். இதையடுத்து கேஎல் ராகுல் துணை கேப்டனாக இல்லாதபோது, அணியிலிருந்து எளிதாக நீக்கமுடியும். ஒரு வீரர் துணை கேப்டனாக இருந்தால், அவர் எத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அணியில் இடம்பெற முடியும்.
கே.எல். ராகுல் பேட்டிங் சராசரி:
டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய தொடக்க காலத்தில் கே.எல். ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு, டெஸ்டில் மோசமான பார்மில் திணற தொடங்கினார். கடந்த 47 இன்னிங்ஸில் கே.எல். ராகுல் 26.15 சராசரியுடன் வெறும் 1,203 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக, 10 டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு முறை மட்டுமே 25 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். கடந்த 20 ஆண்டு கால இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் இவ்வளவு குறைவான சராசரியை வைத்து கொண்டு வேறு யாரும் இவ்வளவு அதிகமான போட்டிகளில் விளையாடியதில்லை.
இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ கே.எல். ராகுல் பின்னாடி இருக்கும் துணை கேப்டன் பதவி காணவில்லை. நீங்கள் துணை கேப்டனாக இல்லாதபோது, உங்களை வெளியே உட்கார வைப்பது நிர்வாகத்திற்கும் தேர்வாளர்களுக்கும் எளிதாகிவிடும். நீங்கள் துணை கேப்டனாக ஆனவுடன், நீங்கள் எந்த வகையான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பரவாயில்லை. விளையாட்டில் பங்கேற்கும் அந்த பதினொரு பேரில் நீங்கள் இருப்பீர்கள். ஆனால் அந்த துணை கேப்டன் டேக் இல்லை. அவர் பேட்டிங்கில் நன்றாக வருவார் என்று நான் நம்புகிறேன். ஆனால் தற்போது துணை கேப்டன் டேக் இல்லை, அதாவது ரோஹித் சர்மாவுடன் சுப்மன் கில் ஓப்பனிங் செய்வதைப் பார்ப்போம்” என்றார்.
3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சுப்மன் கில், சட்டீஸ்கர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.