(Source: Poll of Polls)
Rohit Kohli: ஏமாத்திடாதிங்க சாமி..! ரோகித் & கோலி கம்பேக் கிடைக்குமா? அடிலெய்ட் மைதானம் - யாருக்கு எப்படி?
Rohit Kohl IND Vs AUS 2nd ODI: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் கம்பேக்கிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Rohit Kohl IND Vs AUS 2nd ODI: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா Vs ஆஸ்திரேலியா - 2வது ஒடிஐ:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. 7 மாதங்களுக்குப் பிறகு இந்த தொடரின் மூலம், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் இந்த தொடரின் மீது ரசிகர்கள் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர். ஆனால், அவர்களை மனதை உடைக்கும் விதமாக முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றது. அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா வெறும் 8 ரன்களுக்கும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட்டானது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இதனால், அடிலெய்டில் நாளை நடைபெற உள்ள இரண்டாவது போட்டியிலாவது, இருவரும் அசத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு மலைபோல் எழுந்துள்ளது.
அடிலெய்ட் மைதானம் எப்படி?
அடிலெய்ட் மைதானம் வழக்கமாக பேட்ஸ்மேன்களுக்கான சொர்க்கபுரியாக திகழ்கிறது. நல்ல பவுன்ஸ் மற்றும் கணிக்கக் கூடிய வேகத்தை வழங்குகிறது. சரியான டைமிங் மற்றும் ப்ளேஸ்மெண்டிற்கு பலனளிக்கும் வகையில் நல்ல, மிருதுவான அவுட்-ஃபீல்டையும் கொண்டுள்ளது. எனவே, பவர்பிளேவில் பேட்ஸ்மேன்கள் தைரியமாக தங்களது ஷாட்களை விளையாடி, அணிக்கு அட்டகாசமான தொடக்கத்தை வழங்கலாம். அதேநேரம், போட்டி முன்னேறி செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதோடு, மிதமான வேகம் கொண்ட பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை போக்கை மாற்றக்கூடும். ஷார்ட் ஸ்கொயர் பவுண்டரிகள் இருப்பதால், வேகப்பந்து வீச்சாளர்கள் சிறிய தவறு செய்தாலும் கடுமையான சேதாரங்களை எதிர்கொள்ள நேரிடும். இத்தகைய அடிலெட்ய் மைதானத்தில், இதுநாள் வரை கோலி மற்றும் ரோகித் எப்படி செயல்பட்டுள்ளனர் என்ற புள்ளி விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அடிலெய்ட் மைதானம் - விராட் கோலி
அடிலெய்ட் மைதானத்தில் நான்கு ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியுள்ள விராட் கோலி, இரண்டு சதங்கள் உட்பட 244 ரன்களை சேர்த்துள்ளார். இந்த மைதானத்தில் அவரது சராசரி 61 ஆக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இந்த மைதானத்தில் அவரது செயல்பாடு இன்னும் சிறப்பாக உள்ளது. அதன்படி, 5 போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 537 ரன்களை குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளை சேர்த்து இந்த மைதானத்தில், 12 போட்டிகளில் 5 சதங்கள் உட்பட 975 ரன்களை சேர்த்துள்ளார். 141 ரன்கள் என்பது அவரது அதிகபட்ச ஸ்கோராகும். அதாவது இந்த மைதானத்தில் கடந்த காலங்களில் கோலி சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்பதால், நாளைய போட்டியிலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிலெய்ட் மைதானம் - ரோகித் சர்மா
அதேநேரம், ரோகித் சர்மா இந்த மைதானத்தில் ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடி 131 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அதிகபட்ச ஸ்கோரே 43 ரன்கள் மட்டுமே ஆகும். தனி ஆளாக போட்டியின் போக்கையே மாற்றக்கூடிய வீரராக இருந்தாலும், இந்த மைதானத்தில் இதுவரை பெரிதாக சோபித்ததில்லை என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதனை நாளைய போட்டியில் ரோகித் சர்மா மாற்றுவாரா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் தான் நாளைய போட்டிக்கான டிஆர்பி-யையே நிர்ணயிக்க உள்ளது. இது, அவர்கள் ரன் சேர்ப்பது இந்திய அணிக்கு மட்டுமின்றி, வணிகத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. இருவரும் இன்றி இந்திய அணி களமிறங்கிய போட்டிகள் வணிக ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




















