ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு நிகரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதி வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய  அணி 295 ரன்கள் வித்தியாசத்தில்  அபார வெற்றி பெற்றது.


புள்ளிப்பட்டியலில் இந்தியா:


நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த இந்திய அணிக்கு இந்த வெற்றி மிகவும் முக்கியமான வெற்றியாக அமைந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.


இந்திய அணியின் இந்த வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போதைய புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் 15 டெஸ்டில் ஆடி 9 டெஸ்ட்டில் வெற்றி 5 தோல்வி 1 டிராவுடன் 110 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 13 டெஸ்ட் போட்டியில் 8 வெற்றி 1 தோல்வி 1 டிராவுடன் 90 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தரவரிசை புள்ளிகள் அடிப்படையில் இல்லாமல் சதவீதத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்திய அணி 61.11 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 57.69 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


புதிய புள்ளிப்பட்டியல் விவரம்:



  • இந்தியா – 110 புள்ளிகள் – 61.1 சதவீதம்

  • ஆஸ்திரேலியா – 90 புள்ளிகள் - 57.69 சதவீதம்

  • இலங்கை - 60 புள்ளிகள்   - 55.56 சதவீதம்

  • நியூசிலாந்து - 72  புள்ளிகள்   - 54.55 சதவீதம்

  • தெ.ஆப்பிரிக்கா – 52 புள்ளிகள் - 54.17 சதவீதம்

  • இங்கிலாந்து - 93 புள்ளிகள்      - 40.79 சதவீதம்

  • பாகிஸ்தான் - 40 புள்ளிகள்      -33.33 சதவீதம்

  • வங்கதேசம் - 33 புள்ளிகள்      - 27.50 சதவீதம்

  • வெ. இண்டீஸ் - 20 புள்ளிகள்     - 18.52 சதவீதம்


சில அணிகள் புள்ளிகள் அதிகம் இருந்தும் சதவீதத்தின் அடிப்படையில் பின்தங்கி இருக்கின்றன. அந்தந்த அணிகள் ஆடிய போட்டிகள் வெற்றி,தோல்வி ஆகியவற்றை பொறுத்து கணக்கிடப்படுகிறது. உதாரணத்திற்கு நிய;சிலாந்து அணி 72 புள்ளிகள் பெற்றிருந்தும், 60 புள்ளிகள் பெற்ற இலங்கையை விட பின்தங்கி உள்ளது. அதற்கு காரணம் நியூசிலாந்து 11 போட்டிகளில் ஆடி 6 வெற்றி 5 தோல்விகளை பெற்றுள்ளது. ஆனால், இலங்கை 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 வெற்றி 4 தோல்விகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்த அடிப்படையில் சதவீதம் கணக்கிடப்பட்டு புள்ளிப்பட்டியல் தயார் செய்யப்படுகிறது.