பார்டர் கவாஸ்கர் தொடர்


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்கியுள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான கடைசி 3 டெஸ்ட் தொடர்களிலும் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கியுள்ளது. அதேநேரம், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் களமிறங்கியுள்ளது.


தடுமாறிய ஆஸ்திரேலியா


டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியின் மூலம் சூர்யகுமார் யாதவ் மற்றும் பரத் ஆகியோர், இந்திய அணிக்காக முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளனர். இதேபோன்று, ஆஸ்திரேலிய அணிக்காக மார்பி எனும் இளம் சுழற்பந்துவீச்சாளரும் அறிமுகமானார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே தடுமாற்றம் கண்டது. தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் கவாஜா தலா ஒரு ரன்னுடன் நடையை கட்டினர்.






ஆஸ்திரேலியா ஆல்-அவுட்


நிதானமாக விளையாடிய லபுசக்னே மட்டும் அதிகபட்சமாக 49 ரன்களை சேர்க்க, ஸ்மித் 37 ரன்களையும், அலெக்ஸ் கேரி 36 ரன்களையும், ஹேண்ட்ஸ்கோம்ப் 31 ரன்களையும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி  63.5 ஓவர்களில்177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனிடையே, இன்றைய போட்டியில் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.


இந்திய அணி பேட்டிங்:


அதைதொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் மற்றும் துணை கேப்டன் கே.எல். ராகுல் ஆகியோர்  சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். 71 பந்துகளை எதிர்கொண்ட ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதானமாக விளையாடிய ரோகித் டெஸ்ட் போட்டிகளில் தனது 15வது அரைசத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து போட்டியின் முதல் நாள் முடிவில், 24 ஓவர்களை எதிர்கொண்ட இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 77 ரன்களை சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மார்பி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.