இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தற்போது மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் காயம் காரணமாக பும்ரா களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் களமிறங்கியுள்ளார். ரிஷப் பண்ட் இந்தப் போட்டியில் களமிறங்கவில்லை.


 


இந்நிலையில் முதலில் ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக தொடங்கினார். எனினும் அவர் 11 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் வெறும் 2 ரன்களில் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் அளித்தார். இதைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் உடன் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார்.


 






இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக விரட்டினர். 3வது விக்கெட்டிற்கு இருவரும் ஜோடியாக 68 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய துணை கேப்டன் கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். கே.எல்.ராகுல் 55 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சிறப்பாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடப்பார் என்று கருதப்பட்டது.


 






எனினும் சூர்யகுமார் யாதவ் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 14 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. பின்னர் ஹர்திக் பாண்ட்யா அதிரடியை தொடங்கினார். மறுமுனையில் அக்சர் பட்டேல் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது தினேஷ் கார்த்திக் களத்திற்கு வந்தார். தினேஷ் கார்த்திக் 5 ரன்களில் நாதன் எலிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 


எனினும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்காரணமாக இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்ட்யா 71 ரன்கள் விளாசினார். இதன்மூலம் ஹர்திக் பாண்ட்யா சர்வதேச டி20 போட்டிகளில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக எலிஸ் 3 விக்கெட் விழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலிய அணிக்கு 209 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி 190 ரன்களுக்கு மேல் செஸ் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.