இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடன் நடந்த இன்றைய போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளது. 

Continues below advertisement

சொதப்பிய ஸ்ரேயாஸ்:

தொடக்கத்திலே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது, அடிக்கடி மழை குறுக்கிட்டது, 16 ஓவர்கள் ஆடிக்கொண்டிருந்தபோது ஆட்டத்தை 26 ஓவர்களாக குறைத்தது என பல காரணங்கள் இருந்தாலும் இந்தியாவின் முக்கிய வீரர்கள் சொதப்பலாக ஆடியதே பிரதான காரணம் ஆகும். 

இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோகித் சர்மா 8 ரன்னிலும், விராட் கோலி டக் அவுட்டும் ஆகிய நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 11 ரன்களில் அவுட்டானார். அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்தர இடம் கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் சூழலில் அவரது பேட்டிங் அனைவருக்கும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

Continues below advertisement

சேனா நாடுகளில் சோடையா?

குறிப்பாக, சேனா நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் நடக்கும் போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி வெறும் 59 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். நியூசிலாந்து மண்ணில் 6 ஒருநாள் போட்டிகளில் ஆடி 346 ரன்கள் எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்க மண்ணில் 7 ஒருநாள் போட்டிகளில் ஆடி 154 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்து மண்ணில் மட்டுமே அவர் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திள்ளார். 

ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை 71 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 869 ரன்களை எடுத்துள்ளார். 22 அரைசதங்கள் 5 சதங்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 128 ரன்களை எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டும் அதிகபட்சமாக 12 போட்டிகள் ஆடியுள்ளார். அதில் 319 ரன்கள் எடுத்துள்ளார்.  அதிகபட்சமாக 105 ரன்கள் எடுத்துள்ளார். 

ஹேசல்வுட்டின் இரை:

ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் பெரும்பாலும் இந்திய மண்ணிலே சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. வெளிநாட்டு மண்ணில் அவர் பெரியளவு சிறப்பாக ஆடவில்லை. இந்த நிலை நீடித்தால் அவரது இடம் இந்திய அணியில் கேள்விக்குறியாகிவிடும். 

இதுமட்டுமின்றி ஸ்ரேயாஸ் ஐயர் ஹேசல்வுட் பந்தில் மிக எளிதில் அவுட்டாகிவிடுகிறார். டி20 போட்டிகளில் மட்டும் ஹேசல்வுட் பந்தில் 4 முறையும், ஒருநாள் போட்டிகளில் 2 முறையும் ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்டாகியுள்ளார். வெள்ளை நிற பந்துகளில் ஹேசல்வுட்டிடம் எளிதில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை பறிகொடுத்து விடுகிறார்.

ரோகித் சர்மா, விராட் கோலி தங்களின் கிரிக்கெட் கேரியரின் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், அவர்கள் வெளிநாட்டு மண்ணில் தங்களை ஏராளமாக நிரூபித்துள்ளனர். அடுத்த தலைமுறைக்கான வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் வெளிநாட்டு மண்ணிலும் தன்னை நிரூபிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

ஒரே ஒரு வெளிநாட்டு சதம்:

சேனா நாடுகள் மட்டுமின்றி வங்கதேசத்தில் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி 82 ரன்களும், இலங்கையில் 5 போட்டிகளில் ஆடி 52 ரன்களும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 5 போட்டிகளில் 243 ரன்களும், வெஸ்ட் இண்டீஸில் 6 போட்டிகளில் 297 ரன்களும் எடுத்துள்ளார். 

ஸ்ரேயாஸ் ஐயர் விளாசிய 5 சதங்களில் 4 சதங்கள் இந்திய மண்ணில் விளாசப்பட்டவை. அவர் இதுவரை ஆடிய 70 ஒருநாள் போட்டிகளில் 34 ஒருநாள் போட்டிகள் இந்திய மண்ணில் ஆடியவை. எஞ்சிய போட்டிகள் வெளிநாட்டு மண்ணில் ஆடியவை. அதில் அவர் ஒரே ஒரு சதம் மட்டுமே விளாசியுள்ளார்.