டி 20 போட்டி:


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் சொந்த நாட்டில் நடைபெறும் முதல் போட்டி இது என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியது.


இச்சூழலில் டாஸ் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் களமிறங்கினார்கள். அந்தவகையில் இருவரும் தங்களுடைய பேட்டிங்கை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். சரியான பார்ட்னர்ஷிப் அமைத்த குர்பாஸ் மற்றும் சத்ரான் ஜோடி 50 ரன்களை குவித்தது. முதல் விக்கெட்டை எடுக்க முடியாமல் 7 ஓவர் வரை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். அப்போது அக்ஸர் படேன் வீசிய பந்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் விக்கெட்டை பறிகொடுத்தார். 28 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் என மொத்தம் 28 ரன்களை குவித்தார். பின்னர், இந்திய அணி சார்பில் 8 வது ஓவரை ஷிவம் துபே வீசினார். ஷிவம் துபே வீசிய இரண்டாவது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


அதன்படி, 22 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் என மொத்த, 25 ரன்களை சேர்த்தார்.  இதையடுத்து, அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் ரஹ்மத் ஷா இருவரும் களம் இறங்கினார்கள். இதில், உமர் சாய் அதிரடியாக விளையாடினார். அப்போது ரஹ்மத் ஷா அக்‌ஷர் படேல் வீசிய பந்தில் 3 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த முகமது நபி அதிரடி காட்ட ஆரம்பித்தார். அந்த வகையில் அவர் 27 பந்துகளில் 42 ரன்களை குவித்தார். இவ்வறாக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.


ரன் அவுட் செய்த கில்:


பின்னர், 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிற காரணமே ரோகித் சர்மா ஒரு வருடத்திற்கு பிறகு டி 20 போட்டியில் களம் இறங்கப்போகிறார் என்பது தான். அதேபோல், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்கியது இந்திய அணி. முக்கியமாக 14 மாதங்களுக்கு பிறகு டி 20 போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கினார் ரோகித் சர்மா. மறுபுறம் சுப்மன் கில் களம் இறங்கினார். அதன்படி, முதல் ஓவரை ஆப்கானிஸ்தான் அணி வீரர் இப்ராஹிம் சத்ரான் வீசினார். அதில், இரண்டாவது பந்து வீசிய போது ஓங்கி அடித்தார் ரோகித் சர்மா. அப்போது ரன் எடுக்கும் முனைப்பில் ரோகித் ஓட மறுபுறம் நின்று கொண்டிருந்த சுப்மன் கில் அப்படியே நின்றார்.






இதனை சற்றும் ரோகித் சர்மா எதிர்பார்க்கவில்லை. இதனிடையே விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ரோகித் சர்மாவை ரன் அவுட் செய்தார். அதனால் 14 மாதங்களுக்கு பிறகு டி 20யில் களம் இறங்கிய அவர் டக் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது, தான் ரன் அவுட் ஆவதற்கு காரணமாக இருந்த சுப்மன் கில்லை பார்த்து ஏதோ திட்டிய படி நடந்து சென்றார்.  அப்போதும் கில் அப்படியே நின்றார். இது தொடர்பான வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.