IND Vs SA W: ஃபயரா ஆரம்பிச்சு.. கடைசியில் கோட்டைவிட்ட இந்திய அணி .. தெ.ஆப்., டெயில் எண்டெர்ஸ் சம்பவம்
IND Vs SA W World Cup: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் நேற்றைய லீக் போட்டியில், இந்தியாவை வீழ்த்தி தென்னாப்ரிக்கா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND Vs SA W World Cup: இந்திய அணியை வீழ்த்தியதன் மூலம் தென்னாப்ரிக்கா அணி, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ரிச்சா கோஷ் அபாரம்:
விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், ஸ்மிருதி மந்தனா 23 ரன்களிலும், ஹர்லீன் தியோல் 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஓரளவு நிலைத்து நின்று ஆடிய ப்ரதிகா ராவல், 37 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். இவரை தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். ஆனாலும், மறுபுறம் நிலைத்து நின்று அதிரடியாக ஆடிய ரிச்சா கோஷ், 77 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் உட்பட 94 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரது அபாரமான ஆட்டத்தின் காரணமாக, இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்களை சேர்த்தது.
தத்தளித்த தென்னாப்ரிக்கா அணி:
இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்ரிகா அணியில், தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான லாரா நிலைத்து நின்று ஆடி நல்ல தொடக்கத்தை அளித்தார். ஆனால், மறுமுனையில் ஒற்றை இலக்கங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் 81 ரன்களை சேர்ப்பதற்குள்ளாகவே அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லாராவும், 70 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் க்ரந்தி கவுர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அப்போது அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தது. இதனால், இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி என ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
மிரட்டிவிட்ட க்லோயி - நடினே கூட்டணி:
யாரும் எதிர்பாராத விதமாக 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த க்லோயி மற்று நடினே ஜோடி, இந்திய அணியின் வெற்றிக் கனவை மெல்ல மெல்ல உடைக்க தொடங்கியது. இருவருமே அதிரடியாக ஆடி, பவுண்டரிகளை விளாசினார். குறிப்பாக நடினே இந்திய அணியின் பந்துச்வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 66 பந்துகளில் 49 ரன்களை குவித்து க்லோயி ஆட்டமிழந்தாலும், அதற்குள் பெரும்பாலான சேதாரங்கள் நடத்தி முடிக்கப்பட்டன. மறுமுனையில் நடினே இறுதி வரை ஆட்டமிழக்காமல், 54 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உட்பட 84 ரன்களை குவித்தார். இதனால், 48.5 ஓவர்கள் முடிவிலேயே தென்னாப்ரிக்கா அணி, இலக்கை எட்டி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலிட வாய்ப்பை இழந்த இந்தியா:
புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, நேற்றைய போட்டியில் வென்று முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அதேநேரம், ஐந்தாவது இடத்தில் இருந்த தென்னாப்ரிக்கா அணி, தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து வரும் 12ம் தேதி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள மிகவும் வலுவான ஆஸ்திரேலியாவை, இந்தியா எதிர்கொள்ள உள்ளது. அதில் வெற்றி பெற்றாலும், இந்திய அணி முதலிடத்தை எட்ட முடியும்.




















